மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காரமுனை கிராமத்தைச் சேர்ந்த 14 முஸ்லிம் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாளர்கள், தாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காணிகளை விட்டு இம்மாதம் 30ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு வாகரை பிரதேச செயலகம் உத்தரவிட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தங்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருப்பது, அடிப்படை வாழ்வுரிமையைப் பறிக்கும் பாரபட்சமான நடவடிக்கையாகும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 14 விவசாயிகளும் கடந்த 14ஆம் திகதி ஓட்டமாவடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.
காரமுனை அணைக்கட்டு விவசாய அமைப்பின் தலைவர் வீ.எம். நபீர் கருத்துத் தெரிவிக்கையில், வாகரை பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள வெளியேற்றக் கடிதம் காரமுனை மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும் என்றார்.
“காலங்காலமாக வாழ்ந்து வந்த எங்களது நிலங்களில் இருந்து எங்களை அகற்றுவதற்குப் பதிலாக, எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது எங்களை மேலும் சிரமத்திற்குள் தள்ளும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயியான எம்.எம்.எம். நுபைஸ் கருத்துத் தெரிவிக்கையில், தங்களது மூதாதையர்கள் 1950ஆம் ஆண்டுக்கு முன்னரே இப்பகுதிகளைத் துப்புரவு செய்து மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
“யுத்தக் காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் உயிர் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக இடம்பெயர்ந்தோம். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் சொந்த நிலங்களுக்குத் திரும்பிய நிலையில் இன்று எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெரும் கடன்களைப் பெற்று சோளம், கச்சான், பயறு உள்ளிட்ட பயிர்களைச் செய்கை செய்துள்ள நிலையில் தற்போது வெளியேறுமாறு கூறப்படுவது எங்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.
மேலும், 1962 மற்றும் 1963ஆம் ஆண்டுகளில் தங்களது மூதாதையர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அனுமதிப்பத்திரங்கள் பின்னர் காணி உறுதிகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் மீளப் பெறப்பட்ட போதிலும், இதுவரை அவை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
காரமுனை கிராமம் அமைந்துள்ள 211 மாங்கனி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 1950 முதல் 1983ஆம் ஆண்டு வரை மக்கள் செறிந்து வாழ்ந்ததாகவும், 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தச் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த மக்கள் 2008ஆம் ஆண்டு மீண்டும் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இழுத்தடிக்கப்படும் காணிக்கச்சேரி
மீள்குடியேற்றத்தின் பின்னர், காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2011ஆம் ஆண்டு முதல் மக்கள் விண்ணப்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டிலும் விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன், மூன்று கட்டங்களாக காணிக்கச்சேரி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், 2011 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆவணங்கள் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக 2025ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி காரமுனை விவசாய அமைப்பின் தலைவரும் பள்ளிவாசல் தலைவருமான முஹம்மது அஜ்மீர் உள்ளிட்ட விவசாயிகள் வாகரை பிரதேச செயலாளரிடம் எழுத்து மூலம் நியாயம் கோரியிருந்த போதிலும், இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
காணி ஆணையாளரின் உத்தரவும் புறக்கணிப்பு குற்றச்சாட்டும்
பிரதேச செயலாளரிடமிருந்து தீர்வு கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் காணி ஆணையாளரிடம் முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 2025 டிசம்பர் 24ஆம் திகதி வாகரை பிரதேச செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், காரமுனை மக்களுக்காக உடனடியாக காணிக்கச்சேரி நடத்தி காணி ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காணி ஆணையாளர் உத்தரவிட்டிருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனினும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததுடன், தற்போது காணிகளுக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனக் கூறி 14 விவசாயிகளுக்கு வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மனித உரிமை மீறல் என மக்கள் குற்றச்சாட்டு
2013ஆம் ஆண்டு இப்பகுதியின் சில பகுதிகள் “வாகனேரி ஒதுக்கக்காடு” என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒருபுறம் வனவளத் திணைக்களம் வழக்குகளைத் தொடர்ந்தும் மறுபுறம் பிரதேச செயலகம் வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டும் தங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றாடல் அமைச்சும் வனவளத் திணைக்களமும் தங்களது காணிகள் தொடர்பில் சாதகமான கடிதங்களை வழங்கியிருந்த போதிலும், மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த காணி உத்தியோகத்தர், “இது வனப்பகுதி என்பதால் எதுவும் செய்ய முடியாது” எனத் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்.
தற்போது பல இலட்சம் ரூபாய் செலவில் பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில், திடீர் வெளியேற்ற உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை முற்றாக பாதிப்பதாகவும், இது மனித உரிமை மீறலாகவும் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கையாகவும் இருப்பதாக காரமுனை மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணில் தங்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் காரமுனை கிராம மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments :
Post a Comment