தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 300ஆவது பேரவை அமர்வு வரலாற்று மைல்கல்



எம்.வை. அமீர்-
லங்கையின் உயர்கல்வித் துறையில் முக்கியமான பங்களிப்பை வழங்கி வரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது 300ஆவது பேரவை அமர்வை 2026 மே 23ஆம் திகதி ஒலுவில் வளாக நிர்வாகக் கட்டிட கூட்ட மண்டபத்தில் நடாத்தியது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வு, நிர்வாகத் தொடர்ச்சியிலும் கல்வி வளர்ச்சியிலும் ஒரு முக்கியமான வரலாற்று மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மூன்று நூற்றுக்கும் மேற்பட்ட பேரவை அமர்வுகள் மூலம் பல்கலைக்கழகம் எவ்வாறு கட்டமைப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது என்பதை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் இது அமைந்தது.

1996 மே 15ஆம் திகதி நிறுவப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கையின் தென்கிழக்குப் பகுதி மக்களின் நீண்டகால உயர்கல்வி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் குறைந்த வளங்களுடனும் கட்டமைப்பு சவால்களுடனும் தொடங்கப்பட்ட இவ்வகை நிறுவனம், காலப்போக்கில் கல்வி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டியுள்ளது. இன்று அது தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் கவனம் பெறும் ஒரு உயர்கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிப் பயணத்தில் பேரவை எனப்படும் உயர்மட்ட நிர்வாக அமைப்பு மிக முக்கியமான வழிகாட்டும் சக்தியாக செயல்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தின் முதலாவது பேரவை அமர்வு 1996ஆம் ஆண்டு கல்கிஸ்ஸயில் அமைந்திருக்கும் Academic Programme Centre (APC) வளாகத்தில் நடைபெற்றது. அந்த ஆரம்ப அமர்வு, பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்வி அடித்தளங்களை அமைத்த மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். அந்த முதலாவது பேரவையின் தலைவராக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் செயல்பட்டார். அப்போது உறுப்பினர்களாக கே.எம்.எச். கலித்தீன், பாயிஸ் முஸ்தபா, கே.எம்.எச். அக்பர், அல் ஹாபிஸ் இசட்.ஏ. நஸீர் அஹமட் ரீ. லங்காநேசன், கே.ஏ.டி. அமரசிங்க, எம்.எஸ். நஸீர், உள்ளிட்டோர் பணியாற்றினர். செயலாளராக பதிவாளர் ஏ.எல். ஜௌபர் சாதிக் செயல்பட்டதுடன், நிதியாளர் ஏ. குலாம் றசீட் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார். அந்த ஆரம்ப கட்ட பேரவை எடுத்த தீர்மானங்களே பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தன.

பேரவை என்பது பல்கலைக்கழகத்தின் உயர்ந்த நிர்வாக முடிவெடுக்கும் அமைப்பாகும். கல்வி கொள்கைகள் வகுத்தல், புதிய பீடங்கள் மற்றும் பாடநெறிகளை அங்கீகரித்தல், நிதி மற்றும் வளங்களை ஒழுங்குபடுத்தல், கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை வழிநடத்தல், தர உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அதன் முக்கிய பொறுப்புகளாகும். பல்கலைக்கழகத்தின் நீண்டகால வளர்ச்சியில் பேரவையின் தீர்மானங்கள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் கல்வித் தரத்தையும் நிறுவன வலிமையையும் உயர்த்தி வருகின்றன.

காலப்போக்கில் பேரவையின் வழிநடத்தலின் கீழ் பல முக்கியமான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒலுவில் பிரதான வளாகத்தின் நிர்மாணம், சம்மாந்துறை வளாகத்தின் விரிவாக்கம், நூலக மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளின் மேம்பாடு, ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் உருவாக்கம், மாணவர் நல சேவைகள் மற்றும் விடுதி வசதிகளின் விரிவாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதேபோல் தர உறுதிப்படுத்தல் அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டதுடன், தேசிய மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகள் விரிவடைந்துள்ளன. இவை அனைத்தும் பல்கலைக்கழகத்தை ஒரு பிராந்திய கல்வி நிறுவனத்திலிருந்து உலகளாவிய தரத்திற்கு நகர்த்த உதவியுள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பல உபவேந்தர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஸ்தாபக உபவேந்தராக பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் 15.05.1996 முதல் 11.05.2003 வரையும் பணியாற்றினார். அதற்கு முன் அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியின் பணிப்பாளராகவும் சேவையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கலாநிதி ஏ. ஜி. ஹுசைன் இஸ்மாயில் 05.12.2003 முதல் 21.06.2009 வரையும், கலாநிதி எஸ்.எம். முஹம்மட் இஸ்மாயில் 22.06.2009 முதல் 22.06.2015 வரையும் உபவேந்தர்களாகப் பதவி வகித்தனர்.

பின்னர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம். நாஜிம் தனது முதல் பதவிக்காலம்: 22.06.2015 முதல் 18.06.2018 வரையும் இரண்டாம் பதவிக்காலம்:10.08.2018 முதல் 08.08.2021 வரையும் பணியாற்றினார். இதேவேளை பேராசிரியர் உமா குமாரசுவாமி Competent Authority / இடைக்கால நிர்வாக அதிகாரியாக 19.06.2018 முதல் 09.08.2018 வரையும் கடமையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் 09.08.2021 முதல் 08.08.2024 வரை உபவேந்தராகப் பதவி வகித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராக இருந்து உபவேந்தரான முதல் நபர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

2024–2025 காலப்பகுதியில் கலாநிதி யூ. எல். அப்துல் மஜீட் பதில் உபவேந்தராகச் சேவையாற்றியதுடன், பல்கலைக்கழகத்தின் 17வது பொதுப் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றார்.

தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் 2025.05..26 முதல் பதவி வகித்து வருகிறார்.


இந்நிலையில் நடைபெற்ற 300ஆவது பேரவை அமர்வில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) நியமன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேரவையின் தலைவராக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் செயல்பட்டார். உறுப்பினர்களாக முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, கலை மற்றும் கலாசாரப் பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், பிரயோக விஞ்ஞானப் பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எச்.எம்.எம். நளீர், பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலீம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட பீடாதிபதி ஆர்.கே.ஏ.ஆர். காரியப்பர், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீட பீடாதிபதி அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ்: சமய கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவின் மக்கா சென்றுள்ளதால் அவருக்குப் பதிலாக அந்த பீடத்தின் அரபுமொழித் துறைத்தலைவர் கலாநிதி ஏ.எம். றாசீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மூதவை சபை பிரதிநிதிகளாக பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் பேராசிரியர் எஸ். சப்ராஸ் நவாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமன உறுப்பினர்களாக பேராசிரியர் (திருமதி) ஹேமா எம்.கே.கே. பதிரண, வைத்தியர் கே. அஜித் குமார, ஆர்.எஸ்.எல்.சி. அபேவிக்கிரம, பொறியியலாளர் ஏ. கிருபாகரன், கலாநிதி ஏ.எல்.எம். மௌரூப் சூம் தொழிநூட்பத்தினூடாகவும் கலாநிதி எம்.ஏ. நதீர், , ஐ.எம். ஹனீபா, பொறியியலாளர் எஸ். திலகராஜா மற்றும் ஏ.எம். அப்துல் லதீப் ஆகியோர் நேரடியாகவும் அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

பேரவையின் செயலாளராக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் கடமையாற்றினார்.


300ஆவது பேரவை அமர்வு என்பது வெறும் நிர்வாகக் கூட்டமாக அல்லாது, பல்கலைக்கழகத்தின் கடந்த மூன்று தசாப்தங்களின் வளர்ச்சி, மாற்றம், சாதனை மற்றும் சமூகப் பங்களிப்பை ஒருங்கிணைத்து நினைவுகூரும் ஒரு முக்கியமான தருணமாகும். இது கடந்தகால அனுபவங்களை மதிப்பாய்வு செய்து, எதிர்கால கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி விரிவாக்கம், புத்தாக்கத்திறன் வளர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் புதிய உறுதியை உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. இதன் மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது எதிர்காலப் பயணத்திற்கான புதிய இலக்குகளை உறுதிப்படுத்தி, கல்வி மேன்மை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.








 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :