நிகழ்வில் கலந்துகொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தனது சிறப்புரையில், உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலை, உலகளாவிய மாற்றங்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
“நீங்கள் இப்பல்கலைக்கழகத்தில் இணைந்திருப்பது ஒரு வேலை வாய்ப்பைப் பெற்றதற்காக மட்டுமல்ல. சமூகத்தை மாற்றியமைக்கும் பொறுப்புமிக்க கல்வியாளர்களாக உருவாகும் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளீர்கள். அறிவை உருவாக்குவதும், அதனைப் பரப்புவதும், சமூகத்திற்கு சேவை செய்வதும் கல்வியாளர்களின் அடிப்படைப் பொறுப்புகளாகும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் கல்வித் துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை சுட்டிக்காட்டிய அவர், இன்றைய மாணவர்கள் வகுப்பறைக்கு வருவதற்கு முன்னரே பல்வேறு தகவல்களையும் அறிவுகளையும் பெற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக உள்ளனர் என்றார். எனவே கல்வியாளர்களின் பணி வெறும் தகவல்களை வழங்குவதில் மட்டும் முடிவடையாமல், மாணவர்களின் சிந்தனைத் திறன், ஆய்வுத்திறன், புதுமைத்திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வழிகாட்டிகளாக மாற வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன், கல்விசார் பணியாளர்கள் எந்தவொரு தனிநபர் அல்லது வெளிப்புற அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் சுயாதீனமான சிந்தனையுடனும் தொழில்முறை ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். உண்மையான கல்வியாளர் என்பவர் சுதந்திரமான சிந்தனையையும் நேர்மையையும் காக்கும் ஒருவராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்த உபவேந்தர், கடந்த பத்து ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதையும், பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பு துறைகளில் புதிய முன்னேற்றங்களை நோக்கி பயணித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் புதிய கல்விசார் பணியாளர்கள் பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், கல்வியாளர்கள் தங்களுக்கென தெளிவான இலக்குகளையும் முன்னுதாரணங்களையும் அமைத்துக்கொண்டு கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூக சேவை ஆகிய மூன்று துறைகளிலும் சமநிலையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கல்விசார் பணியாளர்களை பல்கலைக்கழகத்தின் கல்வி, நிர்வாக, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான சூழலுடன் அறிமுகப்படுத்துவதோடு, அவர்களின் தொழில்முறை திறன்கள், கற்பித்தல் ஆற்றல்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் கல்விசார் பொறுப்புணர்வுகளை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சித் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.எச். நபாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸில், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் புதிதாக நியமிக்கப்பட்ட கல்விசார் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் வரவேற்புரையாற்றினார். தனது உரையில், இந்நிகழ்வு ஒரு சாதாரண பயிற்சித் திட்டத்தின் ஆரம்பம் மட்டுமல்லாது, புதிய கல்வியாளர்களின் தொழில்முறை வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைகின்றது எனக் குறிப்பிட்டார்.
உயர்கல்வித்துறை வேகமாக மாறிவரும் இக்காலத்தில், பல்கலைக்கழகங்கள் அறிவைப் பகிர்வதற்கான நிலையங்களாக மட்டுமல்லாமல், விமர்சனச் சிந்தனையாளர்கள், ஒழுக்கமிக்க தொழில்முறையினர், புதுமையாளர்கள், பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் மையங்களாகவும் திகழ வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
புதிய கல்விசார் பணியாளர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டத்தில் அவர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரின் பணி வகுப்பறையில் பாடம் நடத்துவதையோ அல்லது பரீட்சை மதிப்பீடு செய்வதையோ மட்டும் கொண்டதல்ல என்றும் தெரிவித்தார். கற்றலை வழிநடத்துபவர், ஆராய்ச்சியாளர், பாடத்திட்ட வடிவமைப்பாளர், மதிப்பீட்டாளர், ஆலோசகர், வழிகாட்டி மற்றும் கல்விசார் நேர்மையின் முன்மாதிரியாக கல்வியாளர் திகழ வேண்டும் என்றார்.
கல்விசார் மேம்பாடு என்பது பாடவியல் அறிவால் மட்டும் உருவாகாது என்றும், பயனுள்ள கற்பித்தலுக்காக மாணவர் மையப்படுத்தப்பட்ட கற்றல் முறைகள், நியாயமான மதிப்பீடு, ஆக்கபூர்வமான பின்னூட்டம், தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான சுய மேம்பாடு ஆகியவை அவசியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில், இவ்வறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி பல்கலைக்கழக அமைப்பு அறிமுகம், தனிநபர் மற்றும் தொழில் வளர்ச்சி, கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள், மதிப்பீடு மற்றும் கணிப்பீடு, பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வித் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஒழுக்கவியல், பல்கலைக்கழக நிர்வாகம், மூலோபாய முகாமைத்துவம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, மேற்பார்வையிடப்பட்ட கற்பித்தல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இப்பயிற்சி வெறுமனே விரிவுரைகளைக் கேட்கும் நிகழ்வாக இல்லாமல், செயற்பாட்டு ஈடுபாடு, சிந்தனைப் பகிர்வு, அனுபவப் பிரதிபலிப்பு, சகபணியாளர் ஒத்துழைப்பு மற்றும் சுயமுன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக Learning Agreement, Reflective Learning Log, Teaching Practice, Peer Feedback, Mentor Guidance மற்றும் Professional Portfolio போன்ற கூறுகள் மூலம் கல்வியாளர்கள் தமது கற்பித்தல் நடைமுறைகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து மேம்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து “பயிற்சி நிகழ்ச்சியின் நோக்கங்களும் பங்கேற்பாளர்களின் எதிர்பார்ப்புகளும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. புதிய கல்விசார் பணியாளர்களின் எதிர்பார்ப்புகள், பல்கலைக்கழகத்தின் எதிர்கால நோக்கங்கள் மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.எச். நபார் நன்றியுரையாற்றினார்.
புதிய கல்விசார் பணியாளர்களின் திறன் மேம்பாடு, தொழில்முறை முன்னேற்றம், தரமான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பண்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இவ்வறிமுக வழிகாட்டல் பயிற்சி நிகழ்ச்சி, பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான அமர்வுகளுடன் அடுத்த சில வாரங்களும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.





.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)


.jpeg)


.jpeg)


.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)
0 comments :
Post a Comment