“உயர்கல்வி அமைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள புதிய கல்வியாளர்களுக்கு வழிகாட்டிய சிரேஷ்ட பேராசிரியர் ரீ. ஜெயசிங்கம்”



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையம் (Staff Development Centre) ஏற்பாடு செய்துள்ள 2026 ஆம் ஆண்டிற்கான புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கல்விசார் பணியாளர்களுக்கான அறிமுக வழிகாட்டல் பயிற்சி (Induction Programme) தொடரின் முக்கிய செயலமர்வு இன்று (24.06.2026) ஒலுவிலில் அமைந்துள்ள பணியாளர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புதிய கல்விசார் பணியாளர்களை இலங்கையின் உயர்கல்வி அமைப்பு, பல்கலைக்கழக நிர்வாகம், கல்விக் கொள்கைகள் மற்றும் நவீன கல்விசார் சவால்கள் தொடர்பில் ஆழமான புரிதலுடன் உருவாக்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“Orientation as a University Teacher” எனும் தலைப்பில் இடம்பெற்ற இன்றைய அமர்வில், இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பு பற்றிய அறிமுகம், 21ஆம் நூற்றாண்டின் கல்வி மறுசீரமைப்புகள், பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இச்செயலமர்வின் வளவாளராகக் கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் கல்வித்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் ரீ. ஜெயசிங்கம் அவர்கள், உயர்கல்வியின் மாற்றமடைந்து வரும் பரிமாணங்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சமூகப் பொறுப்புகள், கல்வித் தரத்தை உறுதிப்படுத்துவதில் கல்வியாளர்களின் பங்கு மற்றும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவதில் விரிவுரையாளர்களின் கடமை ஆகிய விடயங்களை எடுத்துரைத்தார்.

மேலும், ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் வெறுமனே அறிவைப் பகிர்பவராக மட்டுமல்லாது, மாணவர்களின் சிந்தனையை வடிவமைக்கும் வழிகாட்டியாகவும், ஆராய்ச்சியை முன்னெடுக்கும் அறிவியல் ஆளுமையாகவும், சமூக மாற்றத்தை உருவாக்கும் தலைவராகவும் திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ்.எம். ஜுனைடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்று வரும் இப்பயிற்சித் தொடரை, பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.எச். நபார் நெறிப்படுத்தி வருகின்றார். அதேவேளை, பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் அவர்களின் தலைமையிலும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள கல்விசார் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இச்செயலமர்வு, அவர்களின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமைந்ததுடன், உயர்கல்வித் துறையின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அவர்களிடம் உருவாக்கியுள்ளதாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

புதிய கல்வியாளர்களின் திறன் மேம்பாடு, கற்பித்தல் நுணுக்கங்கள், ஆராய்ச்சி மேம்பாடு, கல்வித் தலைமைத்துவம் மற்றும் மாணவர் மையக் கற்றல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய மேலதிக செயலமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.














 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :