மலையகப்பகுதியில் குளவிக்கொட்டுக்கு ஆளாகி பலர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரங்கணக்கானோர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.கடந்த ஒரு வாரங்களுக்கு முன் கூட ஹட்டன் மற்றும் லிந்துலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு ஆளாகி இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.இதனை கருத்திற்கொண்டு டிக்கோயா என்பீல்ட் தோட்ட இளைஞர்கள் நவீன முறையில் தேயிலைத்தோட்டங்களில் காணப்படும் குளவிக்கூடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இன்று (19) மேற்கொண்டனர்.
இதன்போது தேயிலைமலையில் மரஉச்சிகளில் காணப்படும் குளவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேனீ தொடர்பான உரிய அதிகாரிகளிடம் விளக்கங்களைப் பெற்று அதற்கமைய குளவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இரசாயன புகையிட்டு அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
என்பீல்ட் தோட்ட தேயிலை மலைகளில் சுமார் 70 குளவிக்கூடுகள் காணப்படுவதாகவும் தொழிலாளர்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்களது பணிகளை செய்து வருவதாகவும் இவர்களை பாதுகாப்பதற்காக குறித்த நடவடிக்கையினை சலங்கந்த அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சிவனு கணேசன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இது குறித்து சிவனு கணேசன் கருத்து தெரிவிக்கையில் அண்மைக்காலமாக மலையகப்பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பலர் இறந்து வருகிறார்கள.; இவர்களை பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையோ அரசாங்கமோ தோட்ட நிர்வாகமோ எடுக்கவில்லை. இதனால் தினந்தோரும் உயிர் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாததன் காரணமாக இது தொடர்பாக அனுபவம் உள்ளவர்களிடம் விளக்கங்களைப் பெற்று குளவிகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அரசாங்கமோ தோட்ட நிர்வாகமோ உப கரணங்களை தந்து உதவினால் தேயிலை மலைகளில் காணப்படும் சகல குளவிக்கூடுகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.இன்று கூட எங்களுடைய சொந்த செலவிலேயே இந்த நடவடிக்கையினை நாங்கள் மேற்கோண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது தோட்டத்தொழிலாளர்களும் கருத்து தெரிவித்தனர்.
