எம்.வை.அமீர்-
சமாதான நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் வெறுமனே கௌரவப் பதவியை வகிப்பவர்கள் அல்ல; அவர்கள் சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்ற பொறுப்புமிக்க நபர்கள் என்றும், நேர்மை, நடுநிலைமை, மனிதநேயம், இரகசியக் காப்பு மற்றும் சட்டத்தின் மீதான மரியாதை ஆகியவை அவர்களின் பணியின் அடிப்படை அம்சங்களாக இருக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதவான் ரீ.எல்.ஏ.. மனாப் தெரிவித்தார்.
சாய்ந்தமருது சமாதான நீதிபதிகள் சமூக சேவை ஒன்றியத்தின் 03ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள Town Trulip Reception Hall இல் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் யூ.எல்.ஏ. அஜீஸ் JP தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதவான் ரீ.எல்.ஏ... மனாப் பிரதம அதிதியாகவும், சட்டத்தரணியும் நீதிக்கான மையத்தின் தலைவரும் ஒன்றியத்தின் ஆலோசகருமான செளபி எச். இஸ்மாயில் விசேட அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சமாதான நீதிபதிகள் அமைப்பின் தலைவரும் TA யு மான ஏ.எச்.ஏ. நளீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், கணக்காளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் சமாதான நீதிபதிகளாக ஒன்றிணைந்து செயற்படுவது பாராட்டத்தக்க விடயம் எனக் குறிப்பிட்ட நீதவான் மனாப், இவ்வாறான பன்முகத்தன்மை கொண்ட சமூக சேவை அமைப்பில் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் நீண்ட அறிவுரைகளை வழங்க வேண்டிய அவசியம் குறைவு என்றும் தெரிவித்தார்.
“நாங்கள் பிணக்குகளுக்கு நீதிபதிகளாக இருந்தோம். நீங்கள் சமாதானத்துக்கான நீதிபதிகளாக இருக்கின்றீர்கள். அந்த வகையில் எங்களை விட நீங்கள் சிறந்தவர்கள்” என்ற கருத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், ‘Justice of the Peace’ என்ற பதவியின் அடிப்படை நோக்கத்தை விளக்கிய அவர், சமாதான நீதிபதிகள் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான முக்கியமான பொறுப்பை வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
“சமாதான நீதிபதி பதவி வெறும் கௌரவப் பதவி அல்ல”
சமாதான நீதிபதிகளின் பதவி வெறுமனே ஒரு கௌரவப் பதவி அல்ல என்றும், அது சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பொறுப்பு என்றும் நீதவான் மனாப் தெரிவித்தார்.
நேர்மை, நடுநிலை, மனிதநேயம், இரகசியக் காப்பு மற்றும் சட்டத்தின் மீதான மரியாதை ஆகியவை சமாதான நீதிபதிகளின் அடிப்படை குணங்களாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆவணங்களைச் சான்றொப்பமிடுதல், கையொப்பங்களை உறுதிப்படுத்துதல், சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிமொழி செய்வித்தல், சட்டம் சார்ந்த வழிகாட்டல்களை வழங்குதல், சமூக நல்லிணக்கத்திற்கான சமரசம் மற்றும் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சமாதான நீதிபதிகள் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.
பல பிரச்சினைகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே சமாதான நீதிபதிகளின் தலையீட்டின் மூலம் தீர்க்கப்படுகின்றன. இதனால் அன்றாட வாழ்க்கையில் எழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆரம்ப கட்டத்திலேயே தீர்வு காணும் முக்கிய பொறுப்பு அவர்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் ஒவ்வொரு கையொப்பமும் முக்கியமானது”
கிராமப்புறங்கள் மற்றும் விளிம்புநிலைப் பகுதிகளில் வாழும் மக்கள், பெண்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நீதி மற்றும் நம்பிக்கையைப் பெற்றுக்கொடுப்பதில் சமாதான நீதிபதிகள் முக்கிய பாலமாகச் செயற்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
“உங்களின் ஒவ்வொரு சான்றொப்பமும், ஒவ்வொரு ஆலோசனையும், ஒவ்வொரு சமரச முயற்சியும் ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமூகத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றுகின்றது” என அவர் குறிப்பிட்டார்.
சட்ட அறிவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்
சமாதான நீதிபதிகளின் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியான பயிலரங்குகளை நடத்த வேண்டும் என்றும், சமூக சமரச அமைப்புகள், சட்ட உதவி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அதேவேளை, புதிய மற்றும் இளம் சமாதான நீதிபதிகளுக்கு அனுபவமிக்க சமாதான நீதிபதிகள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊழல், லஞ்சம், பாரபட்சம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் இல்லாத சேவையை உறுதிப்படுத்துவதுடன், சமூகத்தில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“போதைப்பொருள் ஒழிப்பில் சமாதான நீதிபதிகள் துணிச்சலுடன் களமிறங்க வேண்டும்”
இன்றைய சமூகத்தில் போதைப்பொருள் பாவனையும் அதன் வியாபாரமும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதவான் மனாப், இதனை ஒழிப்பதில் சமாதான நீதிபதிகள் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சமாதான நீதிபதிகள் சமூக மட்டத்தில் துணிச்சலுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சத்தியக்கடதாசிகளில் சிறிய பிழைகளும் வழக்குகளைப் பாதிக்கலாம்
தமது உரையின் மற்றொரு முக்கிய பகுதியில், நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் சத்தியக்கடதாசிகளின் தொழில்நுட்பத் துல்லியத்தின் முக்கியத்துவத்தையும் நீதவான் மனாப் விரிவாக எடுத்துரைத்தார்.
சத்தியக்கடதாசிகளில் காணப்படும் சிறிய தொழில்நுட்பப் பிழைகள்கூட நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் தனது நீதித்துறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார்.
குறிப்பாக, சத்தியக்கடதாசியின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் jurat எனப்படும் உறுதிப்படுத்தல் பகுதியிலுள்ள தவறுகள், கையொப்பம், திகதி, இடம் உள்ளிட்ட விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் வழக்குகளின் சட்டப்பூர்வ ஏற்றுக்கொள்ளுதலைப் பாதிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
மத அடிப்படையில் சத்தியக்கடதாசிகளில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்களிலும் உரிய வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான விடயங்களில் சமாதான நீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பிரிவு 66 வழக்குகள் தொடர்பிலும் விளக்கம்
ஆரம்ப நீதிமன்றங்களில் இடம்பெறும் காணி மற்றும் உடமை தொடர்பான பிணக்குகளை உள்ளடக்கும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
காணி அல்லது வீட்டின் உடமை தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்படும் பிணக்குகள் பொலிஸ் நிலையங்களை அடையும் போது, அவை குறிப்பிட்ட சட்ட நடைமுறையின் கீழ் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அவ்வாறான வழக்குகளில் சத்தியக்கடதாசிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனுடன் தொடர்புடைய ஆவணங்களைத் தயாரிக்கும் போதும் சத்தியக்கடதாசிகளை உறுதிப்படுத்தும் போதும் சமாதான நீதிபதிகள் சட்ட நடைமுறைகளைத் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சமூக சேவையை மேலும் விரிவுபடுத்துமாறு வேண்டுகோள்
சாய்ந்தமருது சமாதான நீதிபதிகள் சமூக சேவை ஒன்றியத்தின் பெயரிலேயே “சமூக சேவை” என்ற நோக்கம் வெளிப்படுவதைக் குறிப்பிட்ட நீதவான் T.L.A. மனாப், சமாதான நீதிபதிகள் தங்களது வழக்கமான பணிகளுக்கு அப்பால் சமூக சேவைகளிலும் அதிகளவில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சமூகத்துக்கான சேவைகளை மேலும் விரிவுபடுத்தி மக்களுக்கு பயனுள்ள பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
2026/2027 நிர்வாக சபை தெரிவு
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2026/2027ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவில், ஒன்றியத்தின் தலைவராக பொறியியலாளர் ULM. Ajeez, JP மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
செயலாளராக M.M. Uthumalebbe JPவும், பொருளாளராக U.L.M. அலீம் JPவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பிரதி தலைவர்களாக M. ஹுசைன் முபாறக் JP மற்றும் M.M.M. றபீக் JP ஆகியோரும், பிரதி செயலாளராக M.B. நெளஸாத் JPவும், ஊடக உறுப்பினராக M.Y. அமீர் JPவும், கணக்குப் பரிசோதகராக F. நிஸாப்தீன் JPவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும், M. Athambawa JP, A.A. Bazeer JP, M.M.A. Jabbar JP, U.K. Fasmiya JP, U.L.A. Wahid JP, C.M.A. Munas JP, M.I.M. Ashraff JP, N.M. Alihksn JP, A.L. Masuthulebbe JP, A.M.M. Aswar JP, M.C.M.C. Muneer JP, M.M. Samoon JP, U.K. Kalideen JP, S.A. Nilufa Jaufer JP, M.M.M.M. Mubarak JP, M.H.M. Ashraff JP மற்றும் M.I.M. Sarjoon JP ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
நிகழ்வின் போது பிரதம அதிதி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதவான் T.L.A. மனாப் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சாய்ந்தமருது சமாதான நீதிபதிகள் சமூக சேவை ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்த பொதுக்கூட்டம், சமாதான நீதிபதிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகள், சமூக நல்லிணக்கம், சட்ட விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக சேவை ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பான முக்கிய கருத்துப் பரிமாற்றத்துடன் நிறைவடைந்தது.




0 comments :
Post a Comment