இலங்கை – தமிழ்நாடு கல்வி மற்றும் சமூக உறவுகளுக்கு புதிய பாலம்



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் தலைமையிலான குழுவினர் நட்பு ரீதியான விஜயம்

லங்கைக்கும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, சமூக, பண்பாட்டு மற்றும் கல்வி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் தலைமையிலான குழுவினர் இன்று (17.09.2026) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நட்பு ரீதியான விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்ட இந்தியப் பிரதிநிதிகளை, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் வரவேற்றனர்.

குறித்த உயர்மட்டக் குழுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலீம், பேராசிரியர் எச்.எம்.எம். நளீர், கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் மற்றும் ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், உள்ளிட்டோருடன், பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி யூ.எல். செய்னுடீன், நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி பிரதிப் பதிவாளர் ஐ.எல். தஸ்லின் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இவ்விஜயத்தின் முக்கிய அம்சமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய கல்வி, ஆய்வு, மாணவர் மற்றும் கல்வியாளர் பரிமாற்றம், அறிவுப் பகிர்வு மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைத்து, பல்வேறு துறைகளில் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன் மூலம் இரு தரப்பினருக்குமிடையே கல்வி மற்றும் ஆய்வுத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், இலங்கையின் கல்வி அமைச்சின் பிரமாணங்களுக்கு அமைய தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் இந்தியப் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்தனர்.

இக்கலந்துரையாடலின்போது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமொன்றை அமைப்பது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை குறித்தும் ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதிலும், பிராந்திய மக்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் தமிழ்நாடு மக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் வரலாற்று, சமூக மற்றும் பண்பாட்டு உறவுகளை புதிய தளங்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கல்வி நிறுவனங்களுக்கிடையிலான தொடர்புகளைத் தாண்டி, மக்கள் மட்டத்திலான உறவுகள், அறிவுப் பரிமாற்றம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இளைஞர்களுக்கிடையிலான தொடர்புகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர் ஏ.எம். ஷாஜஹானின் இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பொருளாளரும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீரா சாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹானுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்றாஹீம், தென்காசி மாவட்டச் செயலாளர் செய்யது பட்டானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பு அணியான மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் சபீக் அஹமட் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல் ஹமீத் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்கலந்துரையாடலானது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையே எதிர்காலத்தில் வலுவான கல்வி மற்றும் ஆய்வுக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான அடித்தளமாகவும், இலங்கை – தமிழ்நாடு மக்களுக்கிடையிலான நீண்டகால நட்புறவுகளை கல்வி, அறிவு மற்றும் சமூக ஒத்துழைப்பு ஊடாக புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான முக்கிய சந்திப்பாகவும் அமைந்தது.



















































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :