பிராந்தியத் தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப ஆய்வுகளே காலத்தின் தேவை!



பல்துறை ஆய்வுகளின் ஊடாகவே உலகளாவிய சவால்களுக்கு நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க முடியும் – உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன்
லகளாவிய சவால்களுக்கு ஒரேயொரு துறையின் அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முடியாது என்பதால், பல்துறை அறிவையும் ஆய்வுகளையும் ஒருங்கிணைத்து, பிராந்தியத் தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவது காலத்தின் அவசியமாகும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் ஏற்பாட்டில், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் (SLAAS) கிழக்குக் கிளையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 6ஆவது சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மாநாடு – ICST 2026 இன் நிகழ்வில் சிறப்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“Digital Transformation and Sustainable Technologies: Interdisciplinary Solutions for Global Challenges” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலையான தொழில்நுட்பங்களின் ஊடாக உலகளாவிய சவால்களுக்கு பல்துறை அடிப்படையிலான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.

தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ICT) ஆகிய துறைகள் தனித்தனியானவையாகத் தோன்றினாலும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் சமூகத்துக்கும் குறிப்பாக பிராந்தியத்துக்கும் பெரும் பயன்களை உருவாக்க முடியும் என உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, விவசாயம், உணவு உற்பத்தி, கால்நடை விஞ்ஞானம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, உயிர்முறைமைப் பொறியியல் மற்றும் தன்னியக்கம் போன்ற துறைகளுடன் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இணைப்பதன் மூலம் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு புதிய தீர்வுகளை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, தகவல் முறைமைகள், இணையப் பொருட்கள் (IoT), வலையமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாத்திரமன்றி, விவசாயம், சுகாதாரம், கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தீர்மானங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“செயற்கை நுண்ணறிவை விவசாயத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்த முடியும். இணைய அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் விவசாயிகள், ஆய்வாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் நுகர்வோரை ஒன்றிணைக்க முடியும். இதன் மூலம் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடைமுறைக் கருவியாக மாற்றமடையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் எதிர்காலத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறையை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளின்போது, கிழக்கு மாகாணத்தின் தேவைகள் மற்றும் பிராந்தியத்தின் தனித்துவமான பொருளாதார வாய்ப்புகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என உபவேந்தர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் புவியியல் மற்றும் பொருளாதாரச் சூழலுடன் நெருக்கமாகத் தொடர்புடைய கடல்சார் அறிவியல், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

சர்வதேச மாநாடுகள் வெறுமனே ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் நிகழ்வுகளாக அமைந்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை முன்வைத்து அவை தொடர்பான கருத்துக்களையும் விமர்சனங்களையும் பெற்றுக்கொள்வதற்கும், புதிய கல்விசார் தொடர்புகளையும் ஆய்வுக் கூட்டாண்மைகளையும் உருவாக்குவதற்குமான முக்கிய தளங்களாக இத்தகைய மாநாடுகள் அமைய வேண்டும் என்றார்.

குறிப்பாக, இளம் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வுகள் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன, எவ்வாறு கேள்விக்குட்படுத்தப்படுகின்றன, அவை எவ்வாறு மேம்படுத்தப்படுகின்றன என்பதைக் கற்றுக்கொள்வதற்கு சர்வதேச மாநாடுகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

“ஆய்வுகளின் உண்மையான வெற்றி மாநாடு நிறைவடைந்த பின்னரே வெளிப்பட வேண்டும்” என வலியுறுத்திய உபவேந்தர், மாநாட்டின் ஊடாக உருவாகும் ஆய்வுக் கூட்டாண்மைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்; புதிய கருத்துக்கள் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்; ஆய்வுக் கட்டுரைகள் தரமான சர்வதேச வெளியீடுகளாக மேம்படுத்தப்பட வேண்டும்; மாணவர் ஆய்வுத் திட்டங்களுக்கு புதிய உத்வேகம் வழங்கப்பட வேண்டும்; மேலும் ஆய்வுகளின் பயன்கள் சமூகங்களையும் கைத்தொழில் துறையையும் சென்றடைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ICST மாநாடு ஏற்பாடு செய்யப்படுவது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் கல்விசார் ஈடுபாட்டின் தொடர்ச்சியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் பாராட்டினார்.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்த தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், செயலாளர், ஏற்பாட்டுக் குழு, தொழில்நுட்பக் குழுக்கள், மதிப்பாய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் உபவேந்தர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக நிலையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான அபிவிருத்திக்கு பங்களிக்கும் புதிய ஆய்வுகளையும் கல்விசார் கூட்டாண்மைகளையும் ICST 2026 உருவாக்க வேண்டும் எனவும் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் மேலும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், ICST 2026 ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.என்.எம். முபாறக் வரவேற்புரையாற்றினார். மாநாட்டின் தலைவர் மற்றும் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி ஆர்.கே. அஹமட் றிபாய் கரியப்பர் தலைமை உரையாற்றினார்.

இதன்போது ICST 2026 Abstracts Book வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மாநாட்டின் பிரதான உரையாற்றுநர்களை செயலாளர் – ICST 2026 கலாநிதி ஐ.எம். காலித் அறிமுகப்படுத்தினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசாத் எம். ஜயவீர மற்றும் பயிர் உற்பத்தி முறைமைகள் மற்றும் மாதிரியாக்கல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் பி.எம்.ஏ.எஸ். கருணாரத்ன ஆகியோர் பிரதான உரைகளை நிகழ்த்தினர். இருவரும் நிகழ்நிலையூடாக மாநாட்டில் கலந்து கொண்டு தமது உரைகளை ஆற்றினர்.

மாநாட்டின் இறுதியில் ICST 2026 உதவிச் செயலாளர் எம்.என்.எவ். நஸ்ஹத் நன்றியுரை வழங்கினார்.

மாநாட்டின் ICST 2026 Abstracts Book இன் ஆசிரியராக கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் இணை ஆசிரியராக எஸ்.எல். அப்துல் ஹலீம் ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.

இம்மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 43 ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை தொடர்பான கல்விசார் கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றன.

நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பல்துறை அறிவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் பிராந்தியத் தேவைகளை மையப்படுத்திய ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் முக்கிய கல்விசார் தளமாக அமைந்துள்ள ICST 2026, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எதிர்கால நிலையான அபிவிருத்திக்கான புதிய ஆய்வுக் கூட்டாண்மைகளுக்கும் நடைமுறைத் தீர்வுகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :