ஹாஷிம் உமர் பௌண்டேஷனின், பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினிகள் வழங்கும் சமூகப் பணி!



நலிந்த ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி – ‘மலையின் மகாராணி’ நூல் வெளியீடும் இடம்பெற்றது

எம்.வை.அமீர்-

ஹாஷிம் உமர் பௌண்டேஷன் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் மாபெரும் சமூகநலத் திட்ட நிகழ்வு நேற்று முன்தினம் 19.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாஷிம் உமர் மற்றும் அமைப்பின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், சமூகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளர் ஏ.எம். ரழீம், அழகுக்கலை நிபுணரும் ஆலோசகருமான ராம்ஸி ரஹ்மான், பிரபல தொழிலதிபர்களான ஏ.எம். ஷரிப்தீன் மற்றும் எம். இக்பால், ரிச் கர்லி அழகுக்கலை நிலைய பணிப்பாளர் பாத்திமா ரிஸ்னா அஸ்லம், கோலா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் பசியா யாகூப், ‘தமிழன்’ பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவன தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, ஊடகத்துறை அமைச்சின் புலனாய்வுத்துறை அதிகாரி ஜிப்ரியா இப்றாஹீம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட், இஸ்ரத், சந்திரிகா நிரோசன், படப்பிடிப்பாளர் ஹிஷாம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்

நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்கலைக்கழக மாணவர்களான எம்.ஐ.எம். றஹீம் – பூகொடை, எம்.ஆர்.எப். றிபானா – வத்தளை, எம். நேசிகா – கொட்டகலை, எம்.எஸ்.எப். சஹானா – கட்டுபொத்த மற்றும் எம். தேவிகா – மாங்குளம் ஆகியோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

புரவலர் ஹாஷிம் உமருடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வைத்தனர்.

தற்போதைய உயர்கல்விச் சூழலில் கணினி மற்றும் இணையவழி தொழில்நுட்பங்களின் பயன்பாடு இன்றியமையாததாக மாறியுள்ள நிலையில், பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் இத்திட்டம் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நலிந்த ஊடகவியலாளர்களுக்கும் கரம்

இதேவேளை, ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இருவருக்கு நிதியுதவி வழங்கி கௌரவிக்கப்பட்டமை நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக அமைந்தது.

இதன்படி, சிரேஷ்ட கலைஞர் துல்பிகா அன்வர் அவர்களுக்கும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர் மர்ஹூம் எம். இர்பான் அவர்களின் சார்பில் அவரது புதல்வி பாத்திமா சப்ரினா இர்பான் அவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

ஊடகம் மற்றும் கலைத்துறைக்கு நீண்டகாலமாக பங்களிப்புச் செய்தவர்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
‘மலையின் மகாராணி’ நூல் வெளியீடு

இந்நிகழ்வில் உடப்புசல்லாவையைச் சேர்ந்த ஆசிரியையும் எழுத்தாளருமான சிவப்பிரகாசம் சசிரேகா எழுதிய ‘மலையின் மகாராணி’ எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூலின் முதல் பிரதியை ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டதுடன், உடப்புசல்லாவ கோடன் தமிழ் வித்தியாலயத்திற்காக நூலின் பிரதிகள் அடங்கிய ஒரு தொகுதியையும் நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டு, அவற்றை பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இதன் மூலம் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும் அறிவுத் தேடலையும் ஊக்குவிக்கும் வகையில் கல்வி மற்றும் சமூகப் பணிகளுடன் இணைந்த மற்றுமொரு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
சிறப்பு அதிதிகளுக்கு கௌரவம்

நிகழ்வில் கலந்து கொண்டு சமூகப் பணிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கிய சிறப்பு அதிதிகளுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேஷன் சார்பில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றம், நலிந்த ஊடகவியலாளர்களுக்கான ஆதரவு, கலை மற்றும் இலக்கிய வளர்ச்சி, பாடசாலை மாணவர்களின் வாசிப்பு மற்றும் கல்விசார் முன்னேற்றம் என பல்வேறு தளங்களை உள்ளடக்கியதாக இந்நிகழ்வின் சமூகநல நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகளை வழங்கி வரும் ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் சமூகப் பணிகளில், கல்வி மற்றும் மனிதநேயத்தை மையப்படுத்திய இந்நிகழ்வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

HASSIM OMAR FOUNDATION CHAIRMAN ஹாஷிம் உமர் மற்றும் மரியம் ஹாஷிம் உமர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், ஊடகம், கலை, இலக்கியம் மற்றும் சமூகநலத் துறைகளில் பங்களிப்புச் செய்பவர்களை மதித்து கௌரவிக்கும் நிகழ்வாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :