ரமழானே
உன் வரவுக்காய்
தினங்கள் பல
தவமிருந்து
அகமும் புறமும்
தூய்மை செய்து
வரவேற்ற நாங்கள்
ஈற்றில் ஏதுமே செய்யாது
உன் மகிமையை
அலட்சியம் செய்து
வீசிய கையும்
வெறுங்கையுமாய்
உன்னை வழியனுப்பிய வேதனையை நினைத்து இப்போதுதான்
விசும்பி(க் )
கொண்டிருக்கின்றோம்.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
#########
தினம் நோன்பிருந்து
உனை மான்புறச் செய்ய வேண்டியநாங்கள்
அர்த்தமற்ற காரணங்கள்
ஆயிரம் சொல்லி
அதைக்கூடச் செய்யாமல்
தவற விட்டுவிட்டோம்.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
ஐங்காலத் தொழுகையை
அனுதினமும் தவறாமல் ஆர்வத்துடன் தொழுதிட
கொடிய கொரோனாவால்
மஸ்ஜிதுகளும்
இடம் தர மறுத்ததால்
வீட்டிலேயே முடங்கி
கண்ட கண்ட
நேரமெல்லாம் தொழுது
அதுவும் அலங்கோலமாகிப் போனது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
இராவணக்கம்
ஒன்றைக்கூட
இடைவிடாது
செய்வோமென
சபதம் பூண்டு உன்னை
வரவேற்ற நாங்கள்
கொரோனாவின்
கோரத்தால் மஸ்ஜிதுகளை நெருங்க முடியாமல் இருப்பிடத்திலேயே
ஓரிரு தினங்கள்
ஒழுங்காகத் தொழுது
சோம்பேறித்தனமும்
பொடுபோக்கும்
தோழமை கொள்ள
தனிமையில் தொழுவது கஸ்டமென
அதனையும் இடைநடுவில்
விட்டு விட்டோம்.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
கொரோனா தந்த ஓய்வால்
சிரமம் பாராது குர்ஆன் முழுவதையும்
பல தடவைகள்
ஓதிப் பாராயனம் செய்து
உன்னை மகிழ்விக்க
சபதமெடுத்த நாங்கள்
ஓரிரு பாகங்களை மட்டும்
முன்னிரு நாட்களில் ஓதி
பின்னர் ஓதுவோமென ஓய்வெடுத்ததால்
அதுவும் முழுமை பெறாதது
கடுமையாய் வலிக்கிறது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
மாதம் முழுவதும்
திக்ரு, துஆ ,
தௌபா, இஸ்திக்பார்
என்று இறை தியானத்தில் இரண்டறக் கலந்திட
இயலுமை உள்ளதென்று உத்வேகம் கொண்ட
நாங்கள் சற்றேனும்
அவற்றுக்கு
நேரம் தந்திட
வக்கற்றுப் போன
எமது வறுமையை
நினைத்து வெறுமையில்
வாடி நிற்கின்றோம்.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
இரவின் இறுதிப் பகுதியை இயலுமானவரை
தஹஜ்ஜத்தில் கழித்து
சுஜுதில் முகம் புதைத்து இருகரமேந்தி
இறைவனிடம்
கன்னீர் மல்க
மன்றாடி மான்புறுவோம் என்ற
எம் எண்ணமெல்லாம்
மண்ணாகிப் போய்
விழிபிதுங்கி நிற்கின்றோம்.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஆய்வுகள் பல செய்து ஆரவாரமின்றி
நிலையான தர்மம் செய்திட அறிவுப் பூங்காவில்
ரமழான் முழுவதும் சுற்றிவர
கண்ட கனவுகளெல்லாம்
கானல் நீரானது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
ஏழை எளியோருக்கு
இயலுமானவரை
ஈந்துதவி இறைவனின்
அருளைப் பெற
திடசங்கற்பம் பூண்டும் போலியான பல
காரணங்கள் சொல்லி
ஒன்றுமே செய்யாமல்
ஓரமாய் நின்றதுடன் செய்தவனையும்
செய்ய விடாமல்
வசைபாடி உலக(ப் )
புகழ்பெற்ற விமர்சகர்களாகி
வில்லங்கம் செய்தோம்.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
இறுதிப் பத்தில்
இவற்றையெல்லாம்
சீர்செய்து சமன்
செய்வோமென்ற இறுதித் தீர்மானங்கூட
கொரோனாவின் கொடூரத்தைக்கூட
பார்க்காமல்
பேராசைப் பெருநாள் கொள்வனவுக்கு கடைத்தெருக்களில்
ஏறி இறங்கி(த் )திரிந்ததில்
தோற்றுப் போனது
உறுதியானது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
வணக்கங்கள் செய்யத்தான் எங்களுக்கு நேரமிருக்கவில்லை.
முகநூலில் அகமூன்றி நிலைகுத்திய பார்வையை
நீக்க மனமின்றி
நாள் முழுக்க உலாவர
நன்றாக நேரமிருந்தது.
கனம் தவறாமல்
ஸ்டேடஸ் போட,
லைக் பண்ண,
குறைவில்லாமல் கொமன்ட்ஸ் அடிக்க,
என்ன ஏதென்று பாராமல் வருவனவற்றையெல்லாம்
செயா பண்ண
நிறையவே நேரமிருந்தது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
வட்ஸப்பில் நாளிகை தோறும் வலம் வந்து
நிகழ் நிலையில்
இருப்போரை நிச்சயித்து
இரவு முழுவதும்
விழித்திருந்து
சட் பண்ண
உள்ளத்தின்
ஒப்புதல் கிடைத்தது.
இரவுத் தொழுகை
இரண்டு ரக்அத்தாவது தொழுவதற்கும்
ஒப்பில்லையென உடல் அயர்ந்தது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
#########
கையடக்கத் தொலைபேசிகளில்
காலியாகும்
டேட்டாக்களை
அவ்வப்போது கணக்குப்
பார்த்து
கனம் தவறாது
ரீ சார்ஜ் செய்ய
எவ்வளவாயினும்
பணம் செலவிட
மனமிருந்தது.
ஏழைக்கும் பொது (த் )
தேவைக்கும் உதவிட பணம் வேண்டுமென்றால்
கணக்குப் பார்த்துப் பார்த்து
மனம் சளைத்தது.
ரமழானே
எங்களை மன்னித்து விடு !
##########
இத்தனை இழப்புக்கள்
நடந்த பின்னும் இந்த ரமழான் போனாலென்ன?
அடுத்த ரமழானிலாது
எடுத்த
தீர்மானங்களையெல்லாம் ஒன்றும் விடாமல் நிறைவேற்றுவேனென்ற
வீராவேச இறுமாப்பு மட்டும்
மீண்டும் தொடர்கிறது.
ரமழானே நிச்சயம் நீ
மீண்டும் வருவாய்
ஆயினும் அச்சமயம்
நானிருப்பது நிச்சயமா?
ரமழானே
எங்களை மன்னித்து விடு !