தரமான கற்பித்தலுக்கு உதவும் செயல்நிலை ஆய்வின் முக்கியத்துவம்.

ன்றைய கல்விப்புலத்தில் மாத்திரமன்றி அனைத்துத் துறைகளிலும் செயல்நிலை ஆய்வு (Action Research) முறை காணப்படுகின்றது. தொழில் ரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான நடைமுறையாகவும் இது காணப்படுகின்றது. பொதுவாக வளர்ந்தோர் அனைவருமே சமூகத்தில் வாழ்வாதரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரமன்றி தொழில் முயற்சிகளில் ஈடுபடுவர்.

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் இவர்கள் இணைந்து செயலாற்றுவர். தமது தொழில் நிமித்தம் பல்வேறு பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். இவ்வாறான நேரங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதா? அல்லது அதனை அப்படியே விட்டுவிடுவதா? அல்லது தீர்வு காண்பதற்கான வழிவகைகளைத் தேடி அதன் பிரகாரம் தீர்வை நாடுவதா? அத்தீர்வு வினைத்திறனான வகையில் அமைவதற்குரிய வழிமுறையொன்றைப் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை கண்டறிவதற்குரிய இலகுவான ஒரு வழிமுறையாகவே இந்த செயல்நிலை ஆய்வு காணப்படுகின்றது.

செயல்நிலை ஆய்வானது உலகின் பல்வேறு நாடுகளிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வித்துறையின் விருத்திக்காக இலங்கையிலும் அது பயன்படுத்தப்பட வேண்டுமென்கிற நிலைமையை உணர்ந்ததன் பிற்பாடு இலங்கையின் கல்விப்புலத்தில் செயல்நிலை ஆய்வுச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான ஆய்வு முதன்முதலாக 1967ஆம் ஆண்டில் பாடசாலைப் பிரயோகத்தை மேம்படுத்;;;துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கல்விப்புலத்தில் பல்வேறு மட்டங்களிலும் இச்செயல்நிலை ஆய்வுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. செயல்நிலை ஆய்வானது நிலைமைகளை மாற்றியமைப்பதற்கும், வாண்மைத்துவத் தரங்களை முன்னேற்றுவதிலும் முக்கிய பங்கினை ஆற்றுவதுடன், தான் தொழில்புரிகின்ற இடத்தின் சாதகமற்ற சூழ்நிலைமைகளை மாற்றியமைக்கவும் செயல்நிலை ஆய்வு வழிசமைக்கின்றது.

போர்க் மற்றும் கோல்(1979) எனும் அறிஞர்கள் செயல்நிலை ஆய்வு சம்பந்தமாக கூறும்போது 'வகுப்பறையில் தோன்றும் பிரச்சினைகளை விஞ்ஞானரீதியான படிமுறைகளைப் பாவித்தல், சில படிமுறைகளில் முறையான ஆய்வுகளுக்கு சமனானதாக இருந்த போதிலும் செயல்வழி ஆய்வு அடிப்படையில் வேறுபடுவது அங்கு வெளிப்படும் பிரதேச பாடசாலை நிலைமைகளின் உள்ளார்ந்ததும் பொதுமைப்படுத்தக் கூடியதுமான அளவிலே ஆகும்' என்று கூறுகின்றனர்.

 அதேநேரம் உளவியலாளர் ஜூடித்பெல்(1993) செயல்நிலை ஆய்வு சம்பந்தமாக கருத்துக் கூறுகையில் 'செயல்வழி ஆய்வானது ஒரு ஆய்வு முறை அல்ல. அது ஆய்வின் உட்பிரவேசத்தின் அடிப்படை பண்புகளைக் கொண்டிருக்கின்றது. தொழில் செய்வோரின் தொழில்சார் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயற்பாடுகளின் பெறுபேறுகளை பிரதிபலித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது' என்றும் கூறுகின்றார்.

அந்தவகையில் இந்த செயல்நிலை ஆய்வானது கல்விப்புலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. தரமான கல்வியின் ஊடாக தரமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் கல்வித்திட்டம் 1998ஆம் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோது 'ஆசிரியர் ஒரு ஆராய்ச்சியாளர்' என்கிற வகையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை விருத்தி செய்யும் நோக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் தனிப்பட்ட முறையில் கவனஞ் செலுத்திக் கற்றல் கற்பித்தல் சார்ந்த யதார்த்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இதனைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் வகுப்பறைகளில் எழுகின்ற சிக்கலான சாதகமற்ற வினாக்களுக்கு தீர்வு கூறவேண்டிய அறிவுசார் விசாரணையை முறையாகவும், ஆசிரியரது வாண்மை விருத்திக்கு வித்திடும் வகையில் இச்செயலாய்வு மாற்றங்களை நோக்கியதாகவும் இது அமையவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக செயல்நிலை ஆய்வானது இலங்கையின் கல்விமுறையில் காணப்படும் தரவிருத்தியை மேம்பாடையச் செய்தல், வளர்ந்து வருகின்ற ஒரு தேவையின் அடிப்படையில் வகுப்பறையில் கற்பிக்கும் ஆசிரியர் வகுப்பு நிலைமைகளை தனிப்பட்ட முறையில் கவனஞ்செலுத்தி கற்றல் கற்பித்தல் சார்ந்த யதார்த்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுகின்றது.

வகுப்பறைச் செயற்பாடுகள் தொடர்பாக எழுகின்ற சிக்கல் நிறைந்த சாதகமற்ற வினாக்களுக்கு விடை கூறவேண்டிய அறிவுசார் விசாரணை முறையொன்றாகவும் இது கருதப்படுகின்றது. ஆசிரியர்கள் தமது வகுப்பறைபற்றிக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் வாண்மையுள்ளவராக விருத்தி செய்யும் ஆவலையும் செயல்நிலை ஆய்வு முக்கியத்துவப்படுத்துகின்றது.

செயல்நிலை ஆய்வானது பிள்ளைகளின் விருத்தி, நடத்தை, சமூக இடைத்தாக்கம், கற்றல் இடர்பாடுகள், குடும்ப நிலைமை, அல்லது கற்றற் சூழல் தொடர்பான நிலைமைகளில் ஈடுபடும் ஒருவர் தனது செயற்பாடுகளை ஆழ்ந்து நோக்கி மாற்றியமைப்பதற்கு உதவுகின்றது.


செயல்நிலை ஆய்வு பற்றி கருத்து வெளியிட்ட அறிஞரான லெவின் முன்வைத்துள்ள 'பெறுபேறுகளை நோக்கல்' எனும் அடிப்படையான அம்சத்தின் பொருள் முதன்மையான கருத்து, அதாவது பிரச்சினை பற்றிய விடயங்களைத் தேடியறிந்து அதனைத் தீர்ப்பதற்கு தமது குறைபாடுகளை இனங்கண்டு திட்டத்தை மேம்படுத்திக் கொள்ள ஆவன செய்தலும், அதற்கமைய புதிய கற்றலைப் பெறுவதுமாகும். பின்னரான காலத்தில் ஆழ் சிந்தனை வெளிப்பாடுபிரதிபலிப்பு என அழைக்கப்பட்டு வரும் எண்ணக்கருவும் இதுவேயாகும்.

 இதற்கமைய ஆழ்சிந்தனை வெளிப்பாட்டுப் பிரயோகம் என்பது செயல்நிலை ஆய்வின் ஓர் அடிப்படைய அம்சமாகக் கருதுதல் வேண்டும். செயல்நிலை ஆய்வில் ஈடுபடும் வாண்மையாளர் ஒருவர் ஆழ் சிந்தனை வெளிப்பாட்டைப் பயன்படுத்தலாம். ஆசிரியது கற்பித்தல் நிபுணத்துவத்தை முன்னேற்றுவதற்கு ஆய்வு சார்ந்;;;த செயற்பாடுகள் உறுதியான ஒரு வழிமுறையாகக் கருதப்படுகின்றது. இது ஆசிரியர்கள் கற்பித்தல்  தொடர்பான தீர்மானங்களை எடுக்கவும் உதவுகின்றது.



பாடசாலைகளில் வகுப்பறைக் கற்றலின்போது மாணவர்களை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை வேலைத் திட்டங்களின்போது அதனை வலுப்படுத்துவன் மூலம் கற்றலின் தரத்தை மேம்படுத்துவதுடன், ஆசிரியரையும், அதிபரையும் தொடர்ச்சியாக விருத்தி செய்து, வகுப்பறைக் கற்றல்  - கற்பித்தல் செயன்முறையுடன் தொடர்புடைய சகல தரப்பினருக்கும் இடையே ஒத்துழைத்துச் செயற்படத்தக்க சூழலை உருவாக்குவதாகும். எனவே, வகுப்பறைச் செயன்முறையின்போது சகல தரப்பினரும் அச்செயன்முறை தொடர்பாக விழிப்புடன் நுணுகி நோய்க்கியவாறு செயல்நிலை ஆய்வுகள் முன்னெடுக்கப்படல்வேண்டும் என்பது முக்கியமாகும்.



இதன் மூலம் வகுப்பறையில் சிறப்பான கற்றல் கற்பித்தல் சூழல் உருவாக்கப்படுகிறது. இது ஆசிரியர், அதிபர், ஆசியரிய ஆலோசகரினதும் பணியை இலகுவாக்கி வாண்மைத்துவத்தின் மேம்பாட்டை எடுத்தாள்கின்றது. அத்துடன் வகுப்பறையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குரிய தீர்வை தீர்த்துக் கொள்ளவும் ஏதுவாக இச்செயல்நிலை ஆய்வு பலனிக்கின்றது. இதற்கான இலச்சனங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.



·   ஆய்வுத்திறன் தாழ்மட்டத்தில் உள்ளவர்களும் வழிகாட்டுபவரின் உதவியுடன் வினைத்திறனான ஆய்வொன்றை மேற்கொள்ளலாம்.

·   செயல்வழி ஆய்வில் அதற்குரிய மாதிரிகள் எடுப்புக்களுக்கேற்ப தெரிவு செய்தல் அவசியமற்றது

·   விசேட பிரச்சினைக்கு தீர்வு காண்பது நோக்கமாகையால் அதற்கான விஞ்ஞான முறை மிகவும் குறைந்தளவில் பாவிக்க முடியும்.

·   செயல்வழி ஆய்வொன்றை ஆரம்பிக்க முன்னர் அங்கு பாவிப்பதற்கு எண்ணியுள்ள செயல்முறைகைளத் திட்டமிடுதல்.

·   எளிமையான பகுப்பாய்வு செயல்முறை பயன்படுத்த முடியும்

·   விசேட சூழலில் இயற்கையாக நடைமுறைப்படுத்தி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணமுடியும்.

·   மிகச்சிறிய பிரச்சினையிலிருந்து சிக்கலான பிரச்சினைவரை இவ்வாய்வைப் பயன்படுத்த முடியும்.

·   வகுப்பறையில் ஏற்படுத்தப்படும் சிறு மாற்றங்களுக்கும் செயல்வழி ஆய்வைப் பயன்படுத்தலாம்.

·   செயல்வழி ஆய்வு ஒன்றை பயன்படுத்தும்போது ஆசிரியர் முதன்மை பெறுவதுடன் தனியாகவோ, குழுக்களாகவோ பங்கேற்று செயற்பட்டோ அல்லது இணைந்தோ செயற்படமுடியும்.

·   ஆய்வின் இலகுதன்மை அல்லது சிக்கல் தன்மைகேற்ப அதன் வௌ;வேறு மட்டங்களில் பல்வேறு நபர்களை இணைத்துக் கொள்ள முடியும்.

·   நெகிழ்ச்சியான செயல்முறை (தேவையான சந்தர்ப்பங்களில் ஆய்வுக்கேற்றவாறு ஆய்வுமுறையை மாற்றிக் கொள்ளலாம்)

·   ஒருவர் பெற்றுக் கொள்ளும் அனுபங்களைக் கருத்திக் கொண்டு அவற்றை வேறு வகையில் விபரித்து, பங்கேற்று செயல்முறையினை மீள் பரிசீலனை செய்ய முடியும்.



செயல்நிலை ஆய்வானது முதன்மைச் செயல் மாற்றத்திற்குரியதெனக் கருதப்படும் ஒருநிலைமையைத் தெரிவு செய்தலாகும். தற்போதைய நிலைமைக்குத் தூண்டுதலளித்த காரணிகளைக் கருத்திற் கொண்டு அந்நிலைமையை நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும். ஆய்வு வினாக்களை ஆக்குவதற்கு ஆய்வின் முக்கிய குறிக்கோளை இனங்காணுதல் அவசியமாகும். ஒருமாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுவதற்கு முன் நிலைமையின் பல்வேறுபக்கங்களும் இனங்காணப்படவேண்டும். திட்டமிடப்படும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படக்கூடியனவாக இருப்பதுடன் அவை அவதானமாகக் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுதலும் வேண்டும்.



கேட்லெவின் முன்வைத்த (1947) செயல்நிலை ஆய்வானது முக்கித்துவமிக்கதாகக் காணப்படுகின்றது. அவர் செயல்நிலை ஆய்வுமுறைய வரைவிலக்கணப்படுத்தும்போது 'ஒருபிரச்சினையை இனங்கண்டு அத்தீர்வுக்காகத் திட்டமிடலும், நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவுகளை அறிதலும் ஆகிய செயன்முறைகளைக் கொண்ட சுழற்சிப் படிமுறைகளுமாகும்' என்றும் வரைவிலக்கணப்படுத்துகின்றார். இதிலிருந்து செயல்வழி ஆய்வின் படிமுறைகளான திட்டமிடல், செயற்படுத்தல், அவதானித்தல், பிரதிபலித்தல் போன்றவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், செயல்நிலை ஆய்வானது அறிவு விருத்தியினை மேலெழச் செய்யவும், கோட்பாட்டிக்கு பிரயோகத்திற்குமான இடைவெளியைக் குறைக்கவும், ஆசிரியர் வாண்மையை விருத்தியுறச் செய்யவும், தரவட்டங்களை கட்டியெழுப்பவும், ஆய்வாளனின் அறிவுக்கேற்பக் கட்டியெழுப்பவும், ஆசிரியருக்குப் பயிற்சி அளிக்கக்ககூடிய சிறந்த முறையாகவும், ஆசிரியரின் வாண்மைத்துவத்தை வலுப்படுத்தி மேம்படுத்தவும் செயல்நிலை ஆய்வுகள் முக்கியத்துவமுடையதாகவும் காணப்படுகின்றன.



பொதுவாக வகுப்பறையில் வாசித்தலில் இடர்படுதல், உச்சரிப்பில் தவறுதல், கணிதபாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெறுதல், நேரகாலத்தோடு பாடசாலைக்கு வராமை, கற்றலில் பின்னடைதல், ஆசிரியரது கற்றல் நிலை சரியான ஒழுங்குமுறையுடன் மாணவர்களை சென்றடைகின்றதா? போன்ற பல்வேறு பிரச்சினைகள் வகுப்பறைச் செற்பாடுகளில் காணப்படலாம். இதனை கவனத்திற் கொண்டு மாணவரின் அடைவினை மேம்படுத்தும் நோக்குடன் செயல்நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த மாற்றத்தின் ஊடாக தலையீடுகளுக்கான தரவுகளைச்சேகரித்துக் கொள்வதும் முக்கியமாகும்.

 இதற்காக நேர்காணல், வினாக்கொத்துக்கள், செவ்வைகாண் பட்டியல்கள், குறிப்பேடுகள், புகைப்படங்கள், விடயம் சம்பந்தமான ஆய்வுகள், ஆவணங்கள், ஒளி,ஒலிப் பதிவுகள், மாணவர்களது அடைவுகள் போன்றவற்றை அவதானிப்பதன் மூலம் மாணவர்களின் நிலையை அறிந்து கொள்ளவதுடன், இதுபோன்ற பலவிடயங்கள் ஊடாக ஆய்வினை மேற்கொள்ள முடியும்



மேற்கொண்ட ஆய்வினை அறிக்கைப்படுத்துதல் அவசியமாகும். அதற்கான நியமங்களின் அடிப்படையில் படிமுறையாக்கப்பட்டு அதனைப் பின்பற்றலாம். இதுபோன்ற நியமங்கள் திருத்தமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் உண்மைத்தன்மைக்கு வித்திடும்.

இந்நிலை கல்விமாணி பட்டக்கற்கை நெறியினை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், கல்விக் கல்லூரி ஆசிரியர்கள், பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரிகள், உயர்நிலைக் கற்கைகளை மேற்கொள்பவர்கள் உரிய நியமங்களை மீறாத வகையில் மேற்கொள்ள வேண்டும். வகுப்பறையிலும் உண்மையான பிரச்சினையை கண்டறிவதற்கும் நியமங்களைப் பின்பற்றுவது சாலச் சிறந்ததாகும். அந்த வகையில் இந்த ஆய்வுக்குப் பின்னணியாக அமைந்தவைகள், ஆய்வு வினா, விடய உசாவல், இலக்கிய மீளாய்வு, ஆய்வின் படிமுறைகள், தரவுகளைப் பகுப்பாய்தல், ஆய்வின் ஒழுக்கம், ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முடிவுகள், விதந்துரைகள் போன்றன அறிக்கையின் உள்ளடக்கத்தில் அடக்கப்படும்.



இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயல்நிலை ஆய்வுகள் மாற்றங்களைக் கண்காணித்து அடுத்த சுற்றுக்குச் செல்லவேண்டும். பொதுவாக செயல்நிலை ஆய்வானது குழுநிலை சார்ந்த ஒரு முயற்சியாகும். எனவேதான் ஆய்வாளர் பல்வேறு குழுக்களுடன் சேர்ந்து இயங்கவேண்டும். அதற்காகத் தன்னை இயைவுபடுத்துதல் அவசியமாகும். தொழில் மேன்மையை அதாவது ஆசிரியர் தனது வாண்மைத்துவத்தை சிறப்பிக்கவேண்டுமாக இருந்தால் வகுப்பறையில்; தமது மாணவர்களின் பின்னடைவுக்குக் காரணமாக அமைகின்ற பல்வேறுபட்ட காரணிகளை இனங்காண்பதற்கு செயல்நிலை ஆய்வு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின்றது.

இன்றைய காலத்தில் வகுப்பறைகளில் மாணவர்கள் கற்கின்;றார்களோ இல்லையோ மாதம்முடிவில்; சம்பளம் சுளையாகக் கிடைத்தால்சரி என்கிற ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவர்களின் நிலைமைகள் பாடசாலைக் கல்வியில் நம்பிக்கை இழந்து மாலைநேர வகுப்புக்குள் மாணவர்களை இருக்கச் செய்கின்ற ஒரு நிலைமையும் இன்றைய கல்விப் புலத்தில் காணப்படுகின்றன.

இதற்கான காரணங்களாக அமைவது வகுப்பறைக் கற்றலில் ஆசிரியர்கள் அதிக அக்கரை கொண்டு உழைப்பதிலிருந்து விடுபடுகின்றனர் என்கிற குற்றச் சாட்டும் பேசப்பட்டு வருகின்ற நிலைமையில் வகுப்பறையில் மாணவரின் கற்றல் மேம்பாட்டுக்கு உதவுகின்ற இச் செயல்நிலை ஆய்வுகள் நவீன உலகின் புத்தாக்கமிகுந்த ஆசிரியத்துவத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில்; எவ்வித ஐயமுமில்லை.



எஸ்.எல். மன்சூர்
அட்டாளைச்சேனை
  (நன்றி - த,தி)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :