71 வருடங்களாக மாறி,மாறி நாட்டை கொள்ளையிட்ட ஊழல் பேர்வழிகளை அகற்றி, சந்தர்ப்பவாத ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். கர்வத்தில் புடைத்த அரசியல்வாதிகளை வழியனுப்ப வேண்டும்.எமது நாட்டை அனைவரும் வாழ்வதற்கு ஏற்ப கட்டியெழுப்ப கற்ற தைரிய மிக்க தலைமைத்துவத்துடன் கை கோர்ப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தேசிய மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முகவர் யூ.எல்.எம்.தெளபீக் தலைமையில் காத்தான்குடி பீச்வே ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட போது ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்புக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
மேற்படி விஜயத்தின் போது காத்தான்குடியில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து காத்தான்குடி பரீட் நகர் ஆயுர்வேத வைத்தியசாலை வீதியில் தேர்தல் பிரச்சார மற்றும் மக்கள் சந்திப்புக்கான காரியாலயமும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.