கெளரவ காதர் மஸ்தான்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் இந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று இந்த நாட்டின் தலைசிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நேரம் நெருங்கிவிட்டது.
இந்த வரலாற்று வெற்றியில் வடகிழக்கு மக்களின் அமோகமான ஆதரவும், பங்களிப்பும் பாரியதொரு செல்வாக்கை செலுத்தும் என்பதற்கு எதிர்வரும் பதினாறாம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகள் சான்று பகரும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே இக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது......
சிலர் வடகிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசவுக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்பதாக கதையளந்து திரிகின்றனர்.
இவர்கள் கூருவது போல் எதிர்பார்ப்பது போல் இங்கு எதுவும் கிடையாது.
யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பகுதிகளை கட்டியெழுப்பக்கூடிய திராணியும் ஆற்றலும் கொண்ட தலைவராக பொதுமக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களை இனங் கண்டுள்ளமைக்கு வடகிழக்கில் கோட்டாபாயவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு கூடுகின்ற பொதுமக்களே சாட்சிகளாக திகழ்கின்றனர்.
எதிர்வரும் பதினாறாம் திகதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுடன் இந்த நாட்டின் குடிமக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என்பதையிட்டு நாங்கள் மகிழ்வடைகிறோம்.
போலிப் பிரச்சாரங்கள் ஊடாக தமது இலக்குகளை அடைவதற்கு எதிர்பார்த்திருந்தவர்கள் இம்முறை மண்கெளவ காத்திருப்பது எமக்கு வெளிப்படையாகவே தெரிகிறது எனவும் அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.