வவுனியாவில் கெளரவ காதர் மஸ்தான் எம்.பி.
இனவாதத்தை பேசு பொருளாக்கி தமது அரசியலை ஓட்டிச் செல்பவர்கள் தமது கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார். இன்று வவுனியாவில் அமைந்துள்ள தனது காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
நாம் பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர் அல்ல.எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது எடுத்த ஓரு தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாம் பொதுஜன பெரமுன ஜனாதிபதி அபேட்சகர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கிறோம்.
எதிர்கால இலங்கைக்கு திடமான தலைவராக நாம் கோட்டாபாய அவர்களை பார்க்கிறோம்.
மாற்றுக் கட்சிகள் தமது வயிறுகளை வளர்ப்பதற்காக எமது மக்களிடம் பல்வேறு கதைகளை கூறிக்கொண்டு வருவார்கள்,பணக்கட்டுகளை வீசுவார்கள் அவர்களையிட்டு எமது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்த வன்னி மாவட்டத்தில் யாருடைய அரசாங்கம் அதிகமான அபிவிருத்திகளை செய்திருந்தது என்பதை நாம் என்றும் மறந்துவிட முடியாது.
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெறுகின்ற போது அந்த வெற்றியின் பங்காளிகளாக நாம் மாறவேண்டும்.
சிறுபான்மையினரின் அனைத்து உரிமைகளுக்கும் உத்தரவாதமளிக்கும் உயரிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நாம் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறோம் .
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இடம்பெற்ற அராஜகங்கள் இந்த கோட்டாபாய அவர்களின் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
எண்பதுகளின் இறுதியில் இந்த நாட்டில் இருந்த டயர் கலாச்சாரத்தை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிவர்.
இன்றைய தருணத்தில் பொதுஜன பெரமுன அபேட்சகர் கோட்டாபாய ராஜபக்சவின் ஆதரவு அலை அதிகரித்துச் செல்வதால் எதிரணியினர் மிகவும் தடுமாற்ற மடைந்திருக்கிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.