அம்பாறை மாவட்ட முஸ்லிம்களில் 99 சத வீதத்தினர், ஐ. தே.க. வுக்கு வாக்களித்து வந்த நல்லாட்சி, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி வீதிக்கு வந்துள்ள நிலையில், கொழும்பிலிருந்து சென்று அம்மக்களுடன் ஆர்ப்பாட்டம் செய்யாமல், அவர்களுடன் உட்கார்ந்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டமைக்காக, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு உலமாக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பியே, கடந்த தேர்தல்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும், அக்கட்சி முஸ்லிம்களின் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை இதுவரை தீர்க்கவில்லை.
கடந்த 2005, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஐ. தே. க. வேட்பாளருக்கே முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசனைக்கு அமைய அதிகம் வாக்களித்தார்கள். ஆனாலும், அக்கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போதும், முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்பவில்லை.
ஆளும் கட்சியாக நாம் வந்தால், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவோம் என்ற ஐ. தே. க. வின் வாக்குறுதிகளை நம்பி கிழக்கு முஸ்லிம்கள் 99 வீதம் வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது.
ஆனாலும், நடந்தது என்ன? அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பறிபோன காணிகளில் ஒரு ஏக்கரைக் கூட இதுவரையிலும் விடுவித்துக் கொடுக்கவில்லை. அத்துடன், சவூதி சுனாமி வீட்டுத் திட்டத்தையும் பெற்றுக் கொடுக்க முன் வரவில்லை. இது விடயத்தில் ஒரு சிறு அழுத்தத்தைக் கூட பிரதமர் ஜனாதிபதிக்குக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், "இந்தத் தேர்தல் காலத்திலாவது தமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்" என்ற மக்களின் ஆர்ப்பாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை எவருமே இம்மக்களின் பிரச்சினையை அறிய எட்டிப்பார்க்காத நிலையில், கொழும்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா அம்பாறைக்குச் சென்று, இவர்களின் பிரச்சினையில் தலையிட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.