பயிர்களை அழிக்கும் உரிமை தோட்ட முகாமையாளருக்கு இல்லை விரைவில் நடவடிக்கை திலகர் எம்.பி

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
தோட்டத் தொழிலாளர்கள் உப வருமானத்திற்காக வீட்டுத்தோட்டங்களைச் செய்வது ஆண்டாண்டு கால வரலாறு. அத்தகைய வீட்டுத்தோட்டங்கள் செய்யும் காணிகளின் உரிமம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்கலாம். அது பேசி தீர்மானிக்கப்படல் வேண்டுமே அன்றி அதில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களை அழிக்கும் அதிகாரம் தோட்ட முகாமையாளருக்கு இல்லை. இது குறித்து குறித்த தோட்ட கம்பனியுடன் பேசவுள்ளோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கிளனமோரா தோட்ட காணியில் வீட்டுத்தோட்டம் செய்ததாக கூறி அந்த பயிர்களை நேரடியாக சென்று தோட்ட முகாமையாளர் அழித்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. குறித்த தோட்டத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு வீட்டுத்தோட்ட உரிமையாளரை சந்தித்து கலந்துரையாடிய போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்களின் பிரஜாவுரிமை மறுக்கப்பட்டதோடு இலங்கையில் காணி உரிமையும் மறுக்கப்பட்டது. அதற்காக பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் சென்.கிளயர் - டெவன் தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமனன் உயிர் தீத்ததே காணி உரிமை போராட்டத்திற்கே. அதே சென். கிளயர் தோட்டத்தின் கிளனமோரா பிரிவில் வீட்டுத் தோட்ட காணி உரிமம் தொடர்பில் தோட்ட முகாமையாளர் நடந்து கொண்டுள்ள விதம் எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

நான் மடகொம்பரையில் வீட்டுத் தோட்டம் செய்தே படித்தேன். எங்களுக்கென்று காணி இல்லாதபோதும் தேயிலை இல்லா தரிசு நிலங்களில் ஆங்காங்கே வீட்டுத்தோட்டங்கள் செய்து உப வருமானம் தேடிக் கொள்வது மலையகப் பெருந்தோட்ட பகுதியில் சாதாரணமானது. வரலாறு சார்ந்தது. அந்த வரலாற்றிலே வாழ்ந்து வந்த எங்களுக்கு அதன் உணர்வு புரியும். மண்வெட்டி பிடித்த என் கைகளில் இன்னும் அந்த தழும்பு இருந்துகொண்டே இருக்கிறது. தலவாக்கலை பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்தேன்.
அப்போது வெளிநாட்டில் இருந்தேன். நாடு திரும்பியதும் சம்பவ இடத்திற்கு போய் களநிலமையை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆவல் கொண்டே இங்கு வந்தேன். குறித்த வீட்டுத் தோட்ட உரிமையாளரை சந்தித்து சம்பவம் பற்றி கேட்டு அறிந்தேன். இது தொடர்பாக அவர்கள் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள். காணி பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு பல வழிகள் உண்டு. பச்சைப் பயிரை அதிகாரம் கொண்டு அழிக்கும் உரிமை தோட்ட முகாமையாளருக்கு இல்லை.

இது தொடர்பாக தோட்டக் கம்பனியுடன் பேச உள்ளோம். அவர்களின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக கொள்ள முடியாது. ஆயிரக்கணக்கான வீட்டுத்தோட்ட உரிமையாளர்கள் இவ்வாறு உள்ளனர். அவர்களுக்கு உள்ள உரிமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது. அவர்களில் ஒருவனாவே இன்று இங்கு வந்தேன் இது தோட்ட முகாமையாளரால் செய்யப்பட்டுள்ள உரிமை மீறல் மட்டுமல்ல வன்முறையும் கூட. வன்முறை ஊடாக இத்தகைய பிரச்சினகளை அணுக முற்பட்டால் அதற்கான பதிலையும் அப்படியே எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -