கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பொருத்தமான சூழலை அமைத்துக் கொடுப்பவரே சிறந்ததொரு அதிபர்


சிரியரையும் மாணவரையும் கவர்ந்து, பாடசாலையை கட்டுக்கோப்புடன் வழிநடத்தும் ஆற்றல் அதிபரைச் சார்ந்தது
பாடசாலை எனும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றுபவர் அதிபராவார். நாகரிக வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தில் Civilized Society நல்ல பாடசாலை ஒன்றின் அதிபர் பதவி என்பது உண்மையில் மதிப்பு, கெளரவம் உள்ள ஒரு பதவியாக இருந்து வருவதைக் காணலாம். கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளின் மையமான பாடசாலை தலைமை அதிகாரியான அதிபர் பிரித்தானியாவின் பிரதம அமைச்சருக்கு ஒப்பிடப்படுகிறார் என்றால் அதிபரின் பணி எந்தளவு முக்கியம் என்பது புலனாகின்றது.

அந்த அடிப்படையில் அதிபரும் அவரின் தலைமையின் கீழுள்ள ஆசிரியர்களும் திறமையானவர்களாகவும், விசுவாசமானவர்களாகவும், குறித்த இலக்கை நோக்கிய கூட்டு பொறுப்புள்ளவர்களாகவும் (Collective Responsibility) இருக்கும் போதுதான் பாடசாலையில் முறையான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற முடியும்.
தனது தலைமைத்துவ கவர்ச்சியால் ஆசிரியர்களையும், மாணவர்களையும் கவர்ந்து சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று நிறுவனத்தைக் கட்டுக் கோப்புடனும், சிறப்புடனும், இயங்கவைக்கும் பணி அதிபரைச் சாரும். ஒரு நல்ல அதிபரால் நல்ல ஆசிரியர்கள் உருவாக்கப்படுவதுண்டு. நல்ல ஆசிரியர்கள் அதிபரின் பொருத்தமற்ற சில அணுகுமுறைகளால் செயற்திறன் குன்றி வீணாகப் பயன்படாது போவதும் உண்டு.
ஒரு பாடசாலையை உயர்நிலைக்கும், கீழ் நிலைகளுக்கும் கொண்டு வருவது அதிபரின் கையில்தான் தங்கியுள்ளது. ஒரு பாடசாலை பற்றிய கணிப்பு அப்பாடசாலையின் அதிபராலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எவ்வகையைச் சேர்ந்த பாடசாலைக்குப் பொறுப்பாக இருந்தாலும், அதிபரின் பாத்திரம் பற்றி 1939ம் ஆண்டு கர்ட்லெனின் போன்ற முகாமைத்துவ அறிஞர்கள் பலரால் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டதோடு, (1950-1964) அக்காலத்தில் ஏராளமான ஆராய்ச்சிகள் மூலம் அதிபர் என்னும் பதவியின் தலைமைத்துவத்திற்கு 4 பரிமாணங்கள் உண்டு எனக் கலந்துரையாடப்பட்டது.

1. உதவியாளர்
2. இடைச் செயற்பாட்டு வசதியைச் செய்து கொடுப்பவர்
3. நோக்கத்தின் மீது மிகுந்த கவனமுடையவராயிருத்தல்
4. வேலைகளை இலகுபடுத்தல்

முதல் நிலை முகாமையாளர் ஒருவருக்குரிய சகல கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியவராக அதிபர் காணப்படுகின்றார்.

1950 களில் கல்வி நிர்வாகம் தொடர்பான வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதில் மேற்பார்வையாளராக இருந்த டானியல் டேவ்ஸ் பாடசாலை நிர்வாகத்தில் அதிபரின் நிலையை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

1. அதிபர் பாத்திரம் ஒரு தொழில்
2. அதிபர் ஒரு சமூகச் சூழல்
3. அதிபர் ஒரு தனியார்

மேலும் அதிபரிக்குரிய கடமைகள் அதிகம் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் அவற்றைக் கல்விப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, இணைப்பாடவிதானப் பிரிவு என்று மூன்று துறைகளுக்குள் நோக்கலாம். கல்விப் பிரிவானது பாடத்திட்டத்துடன் சார்ந்த மாணவனின் வகுப்பறைக் கற்பித்தலுடன் தொடர்புபடுகின்றது. இடைப்பாடவிதானப் பிரிவில் கலைத் திட்டம் எனும் மேல் வட்டத்தினுள் உள்ளடக்கப்பட அவனது முழுமையான கல்விக்கும், ஏனைய உடல், உள, ஆளுமை விருத்திக்கும் வகை செய்வதாக உள்ளது. இவற்றை இயக்கவைக்கும் அச்சாணியாக நிர்வாகப் பிரிவு காணப்படுகின்றது. அதிபரும் அவரின் தலைமையிலான ஆசிரியர்களும், இம் முத்துறைகளையும் நடைமுறைப்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றனர்.

அதிபரானவர் ஆசிரியர்களை இனம் கண்டு அவர்களின் இயலுமை மற்றும் பலவீனங்களை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பல்வேறு நேரடி மறைமுக உத்திகளைப் பின்பற்றலாம். கிடைக்கும் வளங்களைக் கொண்டு உச்ச பயன் பெறும் வகையில் பொருத்தமாகவும், சரியாகவும், நிதானமாகவும், பாடசாலைக்கான நேர சூசியைத் தயாரித்தல் வேண்டும். இது அதிபரின் முக்கிய பணியாகும். மேலும் நிர்வாகத்திற்கான ஆட்களை நியமித்தலை நோக்கும் போது கல்வித் தகுதியும், சேவை அனுபவமும், ஒப்படைக்கும் பணிகளை திறமையுடன் செய்யும் ஆற்றலும், பிரதி அதிபர், உப அதிபர், பகுதித் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள் ஆகியோரை நியமிக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களாகும்.
இணைப் பாடவிதானச் செயற்பாடுகளை நோக்குகையில், அவற்றைத் திட்டமிடுவதும், அதற்கான ஆளனியினரைப் பொறுப்பாக்கலும், இவ்விடயத்தில் பொறுப்பானவர்களை இனம் கண்டு உரிய பொறுப்புகளைக் கையளித்தலும் அதிபரின் கடமையாகும். பாடசாலை வகுப்பறைகளைத் திட்டமிட்டு அமைப்பதும், மாணவர்களை வகைப்படுத்தி அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும், அதிபரின் கடமையாகும்.
கற்றல், கற்பித்தலுக்கான ஏற்ற சூழலை Academic Atmosphere அமைத்துக் கொடுத்து இது விடயத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை பயனுள்ளவிதத்தில் தூண்டிவிடுபவராக அதிபர் இருத்தல் வேண்டும். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் உடல், உளத்திறன் விரித்தி போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட பாடசாலை மட்ட அமைப்புகளை உருவாக்குவதும், அது விடயத்தில் குறிப்பிட்ட ஆசிரியர்களைப் பொறுப்பாக்கி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஊக்குவிப்பதும் அதிபரின் கடமையாகும்.

மேலும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை அமைப்புக்களும் அவற்றின் நடைமுறைகளும் மாத்திரம் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை உச்ச நிலையில் பேண போதுமானது அல்ல. கல்விசார் வெளிநிலை நிர்வாக அமைப்புகள் (திணைக்களம், அமைச்சு) பாடசாலை அபிவிருத்தி சபை, ஏனைய சமூக அமைப்புக்கள் (விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் சங்கம்) அரச அலுவலகங்கள், (பிரதேச செயலகம்), கூட்டுறவு அமைப்புக்கள் தேசிய, சர்வதேச அமைப்புகள் (செஞ்சிலுவைச் சங்கம்) போன்றன பாடசாலையின் தேவைகளை நிறைவு செய்ய அவசியமான அமைப்புக்களாகும்.
இவ்வமைப்புக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி அவற்றின் மூலம் பாடசாலை பயன்பெற வழி செய்வது அதிபரின் கடமையாகும். மேலும் புதிய விடயங்கள் முதலில் அதிபர் மூலம் ஆசிரியர், மாணவர்களுக்கு சென்றடையக் கூடிய வகையில் வெகுசனத் தொடர்பு சாதனங்கள், தேசிய, சர்வதேச கல்விசார் அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொள்பவராக அதிபர் இருத்தல் வேண்டும். அத்துடன் மாணவர்களிடத்தில் உண்மையான அன்பு, விசுவாசம், பிரச்சினைகளைக் கண்டு தளர்ந்து போகாது செயற்படல், தற்துணிவு, நம்பிக்கை, மன உறுதி என்பன ஒரு நல்ல அதிபருக்குரிய பண்புகளாகும்.
மேலும் கவர்ச்சிகரமான அலுவலகச் சூழல், நிர்வாகச் சூழல், பாடசாலைச் சூழல் என்பன ஒரு நல்ல அதிபரின் நிர்வாகத்தின் இலட்சனங்களாகக் காணப்படுகின்றன. அலுவலகச் சூழல் அழகாகவும் தொடர்பாடலுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு இருத்தல் வேண்டும். அதேபோல பாடசாலைச் சூழலை திட்டமிட்டு ஒழுங்கு படுத்தும் ஆர்வம் உள்ளவராக அதிபர் காணப்பட வேண்டும். அது மட்டுமன்றி உச்ச சேவையைப் பெறக் கூடியவகையில் ஆசிரியர் குழுவை ஊக்கப்படுத்தி பொதுவான மதிப்பீட்டு முறைகளைத் தயாரித்து குறைபாடுகளுக்கு தீர்வு காணல், ஆசிரியர் குழாமுடன் சேர்ந்து வேலைத் திட்டங்களை தயாரித்தல், பாடவிதானங்களையும், கற்பித்தல் நவீனமயமாக்களையும் உருவாக்கல் போன்றன அதிபர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும்.

மேலும் தனது பாடசாலையின் ஊட்டப் பிரதேசத்தில் மக்களுடைய பொருளாதாரம், சமூகம், மனப்பாங்கு தொடர்பான விளக்கத்தைப் பெற்றிருத்தல், பெயர்ப் பட்டியலை சரிசெய்தல், வரவு சராசரிகளை கணக்கிடல், மாணவர்களைச் சேர்த்தல் மற்றும் விலக்குதல் போன்ற நடவடிக்கைகள் பற்றி அறிந்திருத்தல், தனது பாடசாலையின் கல்வி நோக்கம், அதன் முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற பல்வேறு சக்திகளுக்கிடையில் தொடர்பைப் பேணவும், முரண்பாடுகளைத் தீர்த்துவைக்குமாறு உழைத்தல், தனது தலைமைத்துவத்தின் மீது அடுத்தவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் அறிவாற்றலுடன் செயற்படுதல் போன்றன அதிபரிடத்தில் காணப்பட வேண்டிய திறமைகளாக் கூறலாம்.
மேற்படி அனைத்து அம்சங்களையும் பொருத்தமான வகையில் உள்வாங்கிக் கொண்ட அதிபரின் முழுமையான பங்களிப்பே ஒரு நல்ல பாடசாலையின் நல்ல விளைவுக்கும் இடமளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நன்றி
எம்.எப்.எப். முப்ரா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -