கல்முனையில் இலத்திரனியல் நூலக வசதிகளை ஏற்படுத்த உதவுமாறு ஆசியா பவுண்டேஷனிடம் முதல்வர் றகீப் வேண்டுகோள்


அஸ்லம் எஸ்.மௌலானா, பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களில் இலத்திரனியல் நூலக வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஆசியா பவுண்டேஷன் உதவ முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்படவுள்ள பொது நூலகத்திற்கு ஆசியா பவுண்டேஷன் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசியா பவுண்டேஷன் நிறுவனத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அன்டனி டி.நல்லதம்பியுடனான சந்திப்பின்போதே முதல்வர் இக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இச்சந்திப்பு கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் ஆசியா பவுண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இதன்போது ஆசியா பவுண்டேஷன் நிறுவனமானது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நூலகங்களின் விருத்திக்கும் ஆற்றி வருகின்ற பங்களிப்புகள் குறித்து ஆசியா பவுண்டேஷன் நிறுவனத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளரினால் விபரிக்கப்பட்டதுடன் கல்முனையிலுள்ள பொது நூலகங்களின் நிலைவரங்கள் குறித்தும் முதல்வரிடம் கேட்டறிந்து கொண்டார்.
கல்முனை மாநகர சபையின் கீழ் நான்கு பொது நூலகங்களும் சில வாசிகசாலைகளும் சிறப்பாக இயங்கி வருவதாக தெரிவித்த முதல்வர் றகீப் அவர்கள், இந்நூலகங்களுக்கு ஆசியா பவுண்டேஷன், புதிய நூல்களை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்கின்ற பெரிய நீலாவணை கிராமத்தில் புதிய பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்கு தம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த முதல்வர், இந்நூலகத்திற்கு தேவையான பெரும்பகுதி நூல்களை கொள்வனவு செய்வதற்கு இந்நிறுவனம் உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் தற்போதைய நவீன உலக சவால்களுக்கு எமது பகுதி இளைஞர், யுவதிகளும் மாணவர்களும், கல்விமான்களும் முகம்கொடுக்கும் வகையில், எமது பொது நூலகங்களில் இலத்திரனியல் நூலக வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக தெரிவித்த முதல்வர் றகீப் அவர்கள், அது குறித்தும் ஆசியா பவுண்டேஷனின் புத்தகங்கள் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அண்டனியிடம் வலியுறுத்தியதுடன் இருவரும் அது குறித்து குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
முதல்வரின் இக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்த பணிப்பாளர் அன்டனி, ஜீ.சி.ஈ.சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் நலன்கருதி கடந்த கால பரீட்சை வினாத்தாள் தொகுதிகள் அடங்கிய நூல்களை இப்பொது நூலகங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் சிறுவர்களுக்கான நூல்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -