நிந்தவூர் கலாசார நிலையம் மீண்டும் உயிர்ப்பெடுக்கிறது



ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் மறுநிர்மாணப் பணிகள் ஆரம்பம் – 300 மில்லியன் ரூபாய் முதல் கட்ட நிதி ஒதுக்கீடு

24 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் மறுநிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக தலைமையில் நிந்தவூரில் நடைபெற்றது.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்றாகத் தடைப்பட்டிருந்த இந்தத் திட்டம், பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையையும் எதிர்பார்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான 945.04 மில்லியன் ரூபாவையும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உரையாற்றுகையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிந்தவூர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக இந்த கலாசார மண்டபத் திட்டம் இருந்ததாக நினைவுகூர்ந்தார்.

“இந்த நாடு பல ஆண்டுகளாக ஊழல், மோசடி மற்றும் பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடிய ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கியிருந்தது. அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஒழுங்குபடுத்துவதற்காக மக்கள் தற்போதைய ஆட்சிக்கு ஆதரவு வழங்கினர். நிந்தவூர் மக்களும் அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக தங்களது வாக்குகளை அளித்தனர்” என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:

“ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்தில் நிந்தவூருக்கு வருகை தந்தபோது, இப்பிரதேச மக்கள் மிகப்பெரிய கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை நாங்கள் மனதில் பதித்துக் கொண்டோம். இன்று அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வரும் தருணத்தை காண்கிறோம். இது நிந்தவூருக்கே அல்ல, முழு அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமையான தருணமாகும்” என்றார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், முன்னைய காலகட்டங்களில் நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியிலிருந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“போதைப்பொருள் பரவல், ஊழல், பொருளாதார சீர்கேடு போன்ற பல பிரச்சினைகள் நாட்டை ஆட்கொண்டிருந்தன. இன்று அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் இலங்கையை மீண்டும் நம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உல்லாசப் பயணத் துறை வளர்ச்சியடையும் சூழல் உருவாகியுள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்கள் இலங்கையையும் பாதித்தபோதிலும், அவற்றை திறமையாக முகாமைத்துவப்படுத்த அரசாங்கத்துக்கு ஆளுமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக, தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியதன் காரணமாகவே மக்களுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்க முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், “வலுவான பொருளாதாரத்தை உருவாக்குதல், இனவாதத்திற்கு இடமளிக்காதிருத்தல், ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல், அனைவருக்கும் சமமான சட்ட அமுலை உறுதிப்படுத்துதல் மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ஒழித்தல் ஆகியவையே மக்களின் ஆணையாக இருந்தது. அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான குறிப்பிடத்தக்க பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டைப் போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் உருவாகும் என சிலர் கருத்து வெளியிட்டாலும், அத்தகைய சூழ்நிலைக்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்றும், உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் திறன் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நிந்தவூர் மக்களின் நீண்டகால கனவாக இருந்த கலாசார நிலையம் மீண்டும் நிர்மாணிக்கப்படுவது, பிரதேசத்தின் கலை, கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புதிய அத்தியாயமாக அமையும் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.




 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :