நிர்வாகக் கட்டமைப்புகள் இன அடிப்படையில் அல்ல; மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையிலேயே அமைய வேண்டும்



அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தல்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, காணி பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு, வெள்ளத்தடுப்பு, மீள்குடியேற்றம் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நிர்வாகக் கட்டமைப்புகள் இனங்களின் அடிப்படையில் உருவாக்கப்படக் கூடாது என்றும், அவை நிலப்பரப்பின் பரப்பு, மக்கள் தொகை மற்றும் நிர்வாகத் தேவைகள் போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாகத் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளை நிறுவுவது அரசியல் நடவடிக்கையல்ல; அது முழுமையான நிர்வாகப் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

காணி பாதுகாப்புக்கு விசேட குழு

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி காணிகள் கைப்பற்றப்பட்டமை பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இனிமேல் அத்தகைய நிலைமைகளுக்கு இடமளிக்க முடியாது எனத் தெரிவித்தார். இதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சட்டவிரோத காணி நிரப்பல்கள் மற்றும் அனுமதியற்ற காணி அபகரிப்புகள் குறித்து பாதுகாப்புப் பிரிவினருக்கு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

கிழக்குக் கடற்கரைக்கு விஞ்ஞான ரீதியான பாதுகாப்புத் திட்டம்

கடலரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதியை பாதுகாப்பது குறித்து கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கடற்கரையைப் பாதுகாத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் விரைவாக ஒருங்கிணைந்த திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

கடல் தடுப்புச் சுவர் அமைப்பது நீடித்த தீர்வாக அமையாது எனக் குறிப்பிட்ட அவர், ஒலுவில் துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்பிடித் துறைமுகம் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வு மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை முன்வைக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், அருகம்பே, பானம உள்ளிட்ட சுற்றுலா மையங்களை மேம்படுத்துதல், மாதுருஓயா வன ஒதுக்கீட்டுப் பகுதிகளை மையமாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள், நுவரகல தொல்பொருள் வன ஒதுக்கீட்டுப் பகுதி பாதுகாப்பு போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

ஒவ்வொரு ஆண்டும் கல்ஓயா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, இறக்காமம், தமன்ன மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கான நிரந்தரத் தீர்வை கண்டறிய அவசர ஆய்வு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதுடன், அதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீள்குடியேற்றுவதற்கான திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உடனடியாக அவசியமான திட்டங்களைத் தயாரித்து மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம்

கல்முனை நகர திட்டமிடல் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களையும் ஒரே மையத்தில் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கான திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

மகாவலி காணிகள் மீளாய்வு

இலங்கை மகாவலி அதிகார சபையினால் பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டும், எந்தவித வர்த்தக அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத காணிகளை மீண்டும் கையகப்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வகையில் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அத்தகைய காணிகளை மகாவலி அதிகார சபையிலிருந்து பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, திட்டமிட்ட முறையில் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

22,000 மில்லியன் ரூபாய் அபிவிருத்தி நிதி

அம்பாறை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 22,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வீதிகள், குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்த முன்னேற்றங்களை ஆய்வு செய்தார்.

இந்த நிதி உரிய காலப்பகுதிக்குள் முறையாகப் பயன்படுத்தப்பட்டு மக்களுக்கு நேரடி பலன்கள் கிடைக்கச் செய்வது அரச அதிகாரிகளின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரிழப்பு இழப்பீடுகள், பயிர்ச் சேத நிவாரணங்கள், கால்நடைத் துறை இழப்பீடுகள், மீனவ சமூக வாழ்வாதார உதவிகள், சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகள் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, அம்பாறை மாவட்ட செயலாளர் அநுபம மங்கள விக்ரமாரச்சி உட்பட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :