சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 13 ஆண்டுகளின் பின்னர் 2026 மே 18 ஆம் திகதி அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா தலைமையில் இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ஆதம்பாவா எம்.பி., தனது உரையின் முக்கியப் விடயமாக சாய்ந்தமருது நகரசபை மற்றும் கரையோரப் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், “சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வழக்குத் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது சாய்ந்தமருது மக்களின் பல வருடங்களான போராட்டத்துக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த முக்கிய முன்னேற்றமாகும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், சாய்ந்தமருது நகரசபை உருவாக்கப்படுவது யாரிடமிருந்தும் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கை அல்ல என்றும், அது நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு மக்களின் நிர்வாக நீதிக்கான கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார். “சாய்ந்தமருது நகரசபை தனது பணிகளை ஆரம்பிக்கும் போது கல்முனை மாநகரின் ஏனைய பிரதேச மக்களும் அரசாங்கம் தங்களுக்கும் அநீதி செய்யவில்லை என்பதை புரிந்துகொள்வார்கள். இது பிரிவினைக்கான முயற்சி அல்ல; ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரிய நிர்வாகத்தையும் அபிவிருத்தி வாய்ப்பையும் வழங்கும் ஒரு நீதியான செயற்பாடாகும்” என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சில அரசியல் சக்திகள் மற்றும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் சாய்ந்தமருது மக்களின் எதிர்கால இலக்கை சிதைக்க முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இன்று பல தரப்பினரும் என்னை சந்தித்து நகரசபை தொடர்பாக பேசுகின்றனர். சிலர் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றனர். ஆனால் நான் இந்த மண்ணின் மகனாக, இந்த மண்ணின் உரிமைக்காக பயணிப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். நாம் ஒற்றுமையாக இருந்தால் சாய்ந்தமருது நகரசபை நிச்சயம் மிளிரும்” என்று அவர் உறுதியளித்தார்.
கடந்த காலங்களில் அரசியல் காரணங்களால் கரையோரப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டதாகவும், தற்போது அதனை மாற்றும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “இந்த அரசாங்கத்தின் கீழ்தான் சாய்ந்தமருதுக்கான சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் அதனை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்படமாட்டாது. ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன” எனக் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாக விளக்கமளித்தார். காரைதீவு மாடிப்பள்ளி பாலம் சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த நிந்தவூர் கலாச்சார மண்டப அபிவிருத்தி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோன்று ஒலுவில் துறைமுக விவகாரம், சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்திலான உதைப்பந்தாட்ட மைதானமாக மேம்படுத்தும் திட்டம், கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்காக 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
“எங்களது கரையோரப் பிரதேசங்கள் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், மீன்பிடி, விவசாயம் மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எந்தப் பிரதேசமும் புறக்கணிக்கப்படக்கூடாது” என அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் அணிவகுப்பு, அஞ்சலோட்டம், உடற்கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு திறன்கள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. குறைந்த வளங்களுடனும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒற்றுமையுடனும் இந்நிகழ்வு மிகவும் ஒழுங்காக நடைபெற்றதாக கலந்து கொண்டோர் பாராட்டினர்.
போட்டியின் இறுதியில் 326 புள்ளிகளைப் பெற்று ஹாதி இல்லம் (பச்சை) சம்பியனானது. 288 புள்ளிகளுடன் வாபி இல்லம் இரண்டாம் இடத்தையும், 236 புள்ளிகளுடன் ராஜி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகள் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். ஹஸீன், எம்.எல்.எம். முதர்ரிஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மாலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment