படிப்பதற்காகச் சென்ற எனக்கு பயங்கரவாதம் எதற்கு...?

 கேள்வி எழுப்புகிறார் கமர் நிஸாம்தீன்

ஐ. ஏ. காதிர் கான்-
நான் அவுஸ்திரேலியாவுக்கு படிப்பை மேற்கொள்ளவே சென்றேன். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அல்ல. அவுஸ்திரேலியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நான் வசித்ததைப் பொறுக்க முடியாதவர்களே, பல்வேறு பிரச்சினைகளை எனக்குத் தோற்றுவித்தனர். அவுஸ்திரேலியாவுக்கு படிப்பதற்காகச் சென்ற எனக்கு, பயங்கரவாத நடவடிக்கைகள் எதற்கு...? என, கமர் நிஸாம்தீன் கேள்வி எழுப்பினார்.
அவுஸ்திரேலியாவில் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர் அர்சலாத் கவாஜா என்பவரே. இதனால் நான், அவுஸ்திரேலியாவில் தனிப்பட்ட ரீதியிலும், இலங்கை மக்கள் மத்தியில் பரவலான முறையிலும் மன உளைச்சலுக்குள்ளானேன் என்றும், கமர் நிஸாம்தீன் தெரிவித்தார்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞரான கமர் நிஸாம்தீன், கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குறித்த இளைஞர் முகங்கொடுத்த அவலங்கள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பிலான உண்மை நிலையை ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பொன்று, (07) புதன்கிழமை மாலை, கொழும்பு - சன்கிரில்லா ஹோட்டலில் (Colombo - Shangrilla Hotel - Lotus Boll Room Yellow)
இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், என்னைத் தடுத்து வைத்து, மீண்டும் குற்றமற்றவன் என, அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்ட நான், தற்போது இலங்கை வந்திருக்கிறேன்.
இது தொடர்பில், பத்திரிகை வாயிலாக முதலில் அறிவித்தவர், எனது சகோதரர் காலிக் நிஸாம்தீன் என்பவராவார்.
எனக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குறிப்புப் புத்தகத்தில் இருந்த கையெழுத்து என்னுடையது அல்லாததால், என்மீது இருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி என்னை முற்றிலும் விடுதலை செய்தார்கள்.
இது விடயத்தில் எனக்கு உதவி புரிந்த ஜனாதிபதி, பிரதமர், திலக் மாரப்பன போன்றோருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
இதேவேளை, எனக்கு அவுஸ்திரேலியாவிலும், இலங்கையிலும் சகல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளைப் புரிந்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது கல்லூரி நண்பர்களும் எனக்கு போதியளவில் உதவினார்கள்.
அவுஸ்திரேலியாப் பொலிஸார், நான் ஒரு நிரபராதி என ஒப்புவித்து, என்னை விடுதலை செய்தார்கள். நான் தங்கும் இடத்தில் அல்லாது, வேறு ஒரு அறையில் அக்குறிப்புப் புத்தகம் இருந்ததே, நான் விடுதலை பெற பிரதான காரணமாகும்.
அதன் பின்பு, அதில் இருந்த கை எழுத்து, என்னுடையது அல்ல என்பது நிரூபனமானமை, எனது விடுதலைக்கு மற்றுமொரு காரணமாகும்.
இது எனக்கு ஏற்பட்டதற்கு பிரதான காரணம், நான் மாணவர் வீஸாவில் இருந்ததுடன், ஆஸிய பிரஜை ஒருவராக இருந்ததேயாகும்.

நான் சட்டப்படி இங்கு வசித்து வந்ததைப் பொறுக்க முடியாதவர்களினாலேயே, இவ்வாறான வீணான சிக்கல்களும் பிரச்சினைகளும் எனக்கு ஏற்பட்டன. இரகசியப் பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின் பேரிலேயே நான் கைது செய்யப்பட்டேன். இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பில் நான் நிதானப் போக்கைக் கடைப்பிடித்தமையால், இறைவன் அருளால் நான் விடுதலை செய்யப்பட்டுவிட்டேன்.
அவுஸ்திரேலிய சிறையில் நான் துன்புறுத்தப்படாவிட்டாலும் கூட, அதனால் நான் பெற்ற அவமானங்களும், கவலைகளும் கொஞ்சநஞ்சமல்ல. நான் எனது பெற்றோர், குடும்ப உறவுகளை விட்டும் பிரிந்திருந்தேன். எனக்கும் வெளியுலகிற்கும் இடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எனது குடும்பத்தார் என்னுடன் தொடர்பு கொண்டு பேச, கிட்டத்தட்ட ஒரு மாதமளவில் எடுத்தது. இவ்வாறு கடுமையாக உளப்பாதிப்புக்குள்ளான எனக்கு, அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும், நிவ் சவுன் வேல்ஸ் பொலிஸாரும், அங்கு கடமை புரியும் அதிகாரிகளுமே பிரதான காரண கர்த்தாக்களாக இருந்தனர்.
என்னை 14 நாட்கள் எவ்வித முறைப்பாடுகளுமின்றி தடுத்து வைத்திருந்தனர். எனது கை எழுத்து இல்லை என்பதை, கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் இருவர் உறுதிபட நிரூபித்தார்கள். இதனால், நான் எவ்வித பாரதூரமான குற்றமற்றவனாக இறுதியில் முற்றிலும் விடுதலையானேன். ஊடகம் வாயிலாக இதுபற்றி இவ்வாறு தெரிந்து கொண்டேன். அர்ஸலாத் காஜா எனும் நபர் என்பவரே, இது தொடர்பில் ஆர்வம் காட்டி வருவதாக அறிந்தேன். நிவ் சவுன்வேல்ஸ் இல் உள்ள பல்கலைக் கழகத்தில் இருந்த இவர் எனது சுபர்வைஸர்களில் ஒருவராவார். எனது பெயரில் அல்லது எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் இவ்வாறான கைங்கரியத்தைச் செய்தவர் அர்சலாத் கவாஜா என்பவராவார்.
அந்தக் கடிதத்தில், என்னால் மெல்கம் டர்ன்புல் மற்றும் ஜுலி பிசொப் ஆகியோரைக் கொலை செய்ய எத்தனிக்கப்பட்டது தொடர்பில் எழுதப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன், ஒபேரா மாளிகையை குண்டு வைத்து தகர்ப்பதற்கும் முயற்சி புரிந்ததாகவும், அந்தக் கடிதத்தில் போலியான முறையில் எழுதப்பட்டிருந்தது என்பதே உண்மை.
இந்த போலியான கடிதத்தைத் தயாரித்த நபருக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்புண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வாறான செயல்கள், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய சதித்திட்டம் என்பதையும் இங்கு திட்டவட்டமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இதனால் அவுஸ்திரேலியாவில் நானும், இலங்கையில் வாழும் எனது குடும்ப உறவுகளும் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வந்தோம். இது தான், எனக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட உண்மையான நிகழ்வாகும் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -