நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்
தலவாக்கலை பி.கேதீஸ்-
புதிதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்திருத்தம், பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை சட்டம் ஆகியன குறித்து அரச அதிகாரிகள் தெளிவைப் பெற்றுக் கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் அந்த சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்பட முன்வரவேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
15.10.2018 நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கடந்த காலங்களில் மலையகப் பெருந்தோட்ட மக்கள் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்பட்டன. இதனால் அவர்கள் அரச சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் இருந்து புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். அரச அதிகாரிகளும் இந்த முறைமை காரணமாக பாராமுகமாகவே செயற்பட்டுவந்துள்ளனர். பிரதேச இணைப்பு குழு கூட்டங்களில் அந்த மக்களின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தியையும் அறிக்கை இடுவதற்கு நிறுவனம் ஒன்று இருக்கவில்லை. இந்த குறையை நீக்கவே பெருந்தோட்ட பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகார சபை சட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். அதேபோல பெருந்தோட்ட பகுதிகளில் பிரதேச சபைகள தமது நிதியைக் கொண்டு சேவையாற்றுவதற்கு இருந்த தடையும் இப்போது நீக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரதேச செயலாளர்களும் பிரதேச சபை செயலாளர்களும் தெளிவினைப் பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
