முதலீட்டின் மூலம் செல்வம் உருவாக்கும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக செயலமர்வு



கொழும்பு பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விழிப்புணர்வு
தென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாசார பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Opportunities for Creating Wealth through Investments in Colombo Stock Exchange (CSE) – A Path to Earn a Living while Staying at Home” எனும் தலைப்பிலான சிறப்பு செயலமர்வு இன்று (13) பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வு, மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், முதலீட்டின் மூலம் செல்வத்தை உருவாக்கும் வழிமுறைகள் மற்றும் வீட்டிலிருந்தபடியே வருமானத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நடைமுறை அறிவை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தலைவியான  எம்.என். பாத்திமா வஷிமா அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் சிறப்புரையாற்றி, இன்றைய பொருளாதார சூழலில் நிதி அறிவு, முதலீட்டு அறிவு மற்றும் மாற்று வருமான வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.

இதனையடுத்து, கொழும்பு பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான முதலாவது வளவாளர் அமர்வு இடம்பெற்றது. இதில் கொழும்பு பங்குச் சந்தை மட்டக்களப்பு கிளை முகாமையாளர் யோகராஜா சுலச்சணன், கொழும்பு பங்குச் சந்தையின் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி எம்.ஜெ.எம். அலீமுடீன் மற்றும் CSE Academy-யின் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி சாந்தன் வாஸ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த அமர்வில் கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான அடிப்படை நடைமுறைகள், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் முதலீட்டின் மூலம் நீண்டகால நிதி இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது வளவாளர் அமர்வில் அல்மாஸ் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அசல பொன்சேகா, முகாமையாளர் – ஷரீஆ ஆலோசனை மற்றும் முதலீட்டு ஆலோசகர் யஹ்யா நிசாமுடீன் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி தலைவர் அம்மார் பைசால் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ முகாமையாளர் ஸஹ்ரா ராசிப் ஆகியோர் கலந்துகொண்டு முதலீடு, ஷரீஆ அடிப்படையிலான ஆலோசனை, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.

குறிப்பாக, முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல், முதலீட்டுத் தீர்மானங்களை அறிவார்ந்த முறையில் மேற்கொள்ளுதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் நிதி வளங்களை முறையாக நிர்வகித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு அறிவூட்டப்பட்டது.

இன்றைய இளைஞர்கள் பாரம்பரிய வேலைவாய்ப்புகளை மாத்திரம் நம்பியிருக்காமல், தமது அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி மாற்று வருமான வழிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இச்செயலமர்வு எடுத்துக்காட்டியது.

மேலும், பங்குச் சந்தை முதலீடுகள் என்பது உடனடி இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்ட ஒன்றல்ல என்பதுடன், சந்தை நிலவரங்களைப் புரிந்துகொண்டு, உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டமிட்ட முறையில் முதலீடு செய்வதன் முக்கியத்துவமும் வளவாளர் அமர்வுகளில் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் செயற்பட்டதுடன், நிகழ்வின் இறுதியில் அவரால் நன்றியுரை வழங்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு, மாணவர்கள் மத்தியில் முதலீட்டு அறிவை வளர்ப்பதுடன், நிதி சுயாதீனம் மற்றும் எதிர்கால செல்வ உருவாக்கம் தொடர்பான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
























 
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :