பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி
பி.எம்.எம்.ஏ.காதர்-பாடசாலை மாணவர்கள் கல்வி கற்பதிலே அதிக அக்கறை செலுத்த வேண்டும் இல்லையேல் எதிர்காலத்தில் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும்.நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் தவறில்லை ஆனால் போனிலோ அல்லது கணனியிலோ விளையாடுகின்ற விளையாட்டுக்கள் உங்களுக்கு பெரும் பாதிப்பையும்,ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் கவிஞர் சோலைக்கிளியின் எண்ணத்தில் உருவான பாடசாலைக்கு ஒரு சிறுவர் நூலகம் அமைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில அண்மையில்(30-08-2018)சிறுவர் நூலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் மூத்த கவிஞர் சோலைக்கிளி கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் பிரதிச் செயலாளரும்,சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர்.எம்.சாலிஹ்,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் பி.எம்.றின்ஸான்,பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.சிவஜோதி ஆகியோருடன் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.இங்கு பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி,கவிஞர் சோலைக்கிளி ஆகியோர் அதிபரிடம் நூல்களையும் கையளித்தனர்.இங்கு மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும,இனிப்பும் அதிதிகளால் வழங்கப்பட்டது.
இங்கு பிரதம அதிதி மேலும் உரையாற்றுகையில் :-மாணவர்களாகிய நீங்கள் சிறப்பாகக்கற்று உயர் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு கற்று பெற்றோரின் கனவுகளையும் அதிபர் ஆசிரியர்களின் கனவுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.இப்போது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக்குறைவு காணப்படுகின்றது.ஆசான்களை,முதியோர்களை மதிப்பதில்லை.
அது தவிர மாணவர்கள் மத்தியில் போதை வஸ்த்துப் பழக்கம் அதிகரித்துக்காணப்படுகின்றது இதனால் கல்வியை இடைநடுவில் விட்டு விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்குச் சென்று தண்டனை பெறும் நிலைக்குள்ளாகின்றனர்.இவ்வாறான வழிகேடுகளில் மாணவர்களாகிய நீங்கள் ஈடுபடாமல் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும் என்றார்.