வேப்பங்குளத்தில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்.
முசலி மண்ணில் திறமையுள்ள வீரர்கள் பலர் இருக்கின்றார்கள்.
அவர்களது திறமைகள் புடம்போடப்பட்டு தேசிய,சர்வதேச ரீதியில் அவர்களது கீர்த்தியும் பெருமையும் பறை சாற்றப்படல் வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று இன்று வேப்பங்குளம் கரப்பந்தாட்ட திடலில் கோலாகலமாக இடம்பெற்றது, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது.
விளையாட்டுக்கள் மூலம் மனிதன் திடமானவனாக மாறுகிறான்.
அவனது உடலும் உளமும் உறுதியடைகின்றன.
கரப்பந்து இலங்கையின் தேசிய விளையாட்டாகும்.இந்த விளையாட்டு இப் பகுதிகளில் பிரபல்யமானதாக இருக்கின்றது.
மேலும் அரசியலில் அடிமைகளாக இருக்காமல் எமது சொந்தக் கால்களில் நிற்கவும் எமது உரிமைகளை வென்றெடுக்கவும் நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதிச் சுற்றில் வேப்பஙகுளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டாடிய முசலி ஹிறா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜனாப் தர்ஷீன் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ராஸிக் பரீத் சமூக சேவகர் ஜ.எஸ்.ஆர்.சி நிறுவனர் ஐனாப் மிஹ்லார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.