அதிகார போதையில் இருந்து இன்னும் ராஜபக்ச சகோதரர்கள் மீளவில்லை. அதனால்தான் மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள நாட்டில் குழப்பங்களை விளைவித்து வருகிறார்கள். அடுத்த பௌர்ணமிக்குள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறி ஐந்தாம் திகதி கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். மூன்று வருடங்களாக பல பௌர்ணமிகள் கடந்துவிட்டன. மக்களுக்கு தீங்கு விளைவித்ததை தவிர இவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.
மூன்று வருடங்களாக இவர்கள் செய்ததை கொஞ்சம் திரும்பி பாருங்கள். அவர்களின் கட்டுபாட்டில் உள்ள தொழில்சங்களை தூண்டிவிட்டு வேலைநிறுத்தம் செய்தார்கள். எந்தவித முன்னறிவித்தலுமின்றி ரயில்வே ஊழியர்கள் செய்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களே பாதிக்கப்பட்டார்கள். நாடுமுழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி பொதுமக்கள் அனைவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவ்வாறு ஆட்சியை கவிழ்பதாக கூறி இவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள், சதித்திட்டங்கள் அனைத்திலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. ஆட்சியில் உள்ளபோது சர்வாதிகாரம் மூலம் பொதுமக்களை துன்புருத்திய இவர்கள் இன்று போராட்டங்கள் மூலம் துன்புறுத்துகிறார்கள்.
நாம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இருப்பதால் இவர்களுக்கு அரச விரோத செயற்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை இவர்கள் துஸ்பிரயோகப்படுத்தி போராட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்தும் இன்னல்களை கொடுத்தால் அரசாங்கமும் ஒருமுறை வழங்கப்பட்ட ஜனநாயகத்தை பொதுமக்கள் நலன்கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.