தகவல் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்கள் குறித்து ஆய்வு
"தீம் பொரெஸ்ட்" இல் அதிக வருமானம் ஈட்டும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான "Hogash" நிறுவனத்தின் பிரதிநிதிகள் மருதமுனையில் அமைந்துள்ள அதன் இணை நிறுவனத்திற்கு கடந்த வாரம் (13.08.2018) வருகை தந்தனர். அத்துடன் தகவல் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்கள் குறித்தும் ஆய்வு மேற்றக்கொண்டுள்ளனர். வேட் பிரஸ் தீம் உற்பத்தியில் ரொமேனியாவில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஹொகாஷ், பல வருட அனுபவம் வாய்ந்தது. உலக அளவில் "தீம்" விற்பனையில் முன்னிலையில் இருக்கும் "Theme Forest" இணையத்தில் முதன்மை விற்பனையாளர்களில் ஹொகாஷ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனமானது மருதமுனையில் அதன் இணை நிறுவனத்தை கடந்த வருடம் "Cyber Actions (PVT) Ltd ." ஊடாக ஆரம்பித்து சிறியளவில் தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனது இணை நிறுவனத்தினூடாக மேலும் பலருக்கு தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அது குறித்த மேலதிக ஆய்வுகளுக்காகவே குறித்த பிரதிநிதிகளான க்ரிஸ் மற்றும் சாண்ட்ரா ஆகியோரின் வருகை அமைந்துள்ளது.
"தகவல் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக தலைநகருக்கு பலரும் படையெடுக்கின்றனர். அத்துடன் சம்பளம் மற்றும் இடமாற்றல் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு எங்களின் சர்வதேச இணை நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த சேவையை எமது பிரதேசத்திலேயே வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்." என சைபர் எக்சன் நிறுவனத்தின் நிறுவுனர் ஏ .எம் றிபாஸ் தெரிவித்தார். மேலும், அரச மற்றும் தனியார் துறைகளைப்பற்றி கிழக்கிலங்கை மக்களிடம் காணப்படும் பாரிய மாறுபட்ட கண்ணோட்டமும் அத்துடன் பாடசாலை மற்றும் பல்கலைகழகம் போன்றவற்றில் வெறுமனே பரீட்சைகளை மாத்திரம் கருத்தில் கொண்டு கற்பிப்பதாலும் முறையான தொழிற்பயிச்சியற்ற கல்விச் சமூகத்திலிருந்து திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களினாலும் தகவல் தொழில்நுட்ப தொழில்த்துறையில் ஆட்களை இணைத்துக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் தொழிற்பயிற்சி அற்றவர்களை இணைத்துக்கொண்டு பயிற்சி வழங்கும் போது, தொழில் பெறுனர்கள் பயிற்சிக் காலத்திலும் அதிக சம்பள எதிர்பார்ப்பினாலும், பொறுமையற்ற தன்மையினாலும் மிக முக்கியமாக நாள்தோறும் அதிதுரிதமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையை அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து படித்தறிவதற்கு ஆர்வமின்மையினாலும் தொடர்ந்து தொழிலில் நிலைத்திருக்காது இடையில் விலகிச் செல்பவர்களே அதிகம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
சைபர் எக்சன் நிறுவனம் 2015 ஆம் ஆண்டிலிருந்து தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு மருதமுனையில் இருந்து "8 தீம்ஸ்" (இங்கிலாந்து), "அன் கோர்ட்" (இத்தாலி) மற்றும் "ஹொகாஷ்" (ரொமேனியா) ஆகிய நிறுவனங்களுக்கான இணை நிறுவனமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.