கல்முனை மாநகர சபை புதிய கட்டட நிர்மாண வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளில் கொழும்பிலிருந்து வருகைதந்த கட்டட திணைக்கள உயர் அதிகாரிகள் குழு நேற்று (5) வியாழக்கிழமை கல்முனை மாநகர சபைக்கு நேரடி விஜயம்செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஆணையாளர் ஜே. லியாகத் அலி, பொறியியலாளர் ரி. சர்வானந்தன், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக் மற்றும் கட்டட திணைக்களத்தின் பொறியியலாளர்கள், படவரைஞர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்முனை மாநகர கட்டடத்தின் அமைவிடத்தை குறித்த உயர்மட்டக் குழுவினர் பார்வையிட்டு கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேலும் குறித்த கட்டட நிர்மாணப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்கும் வகையில் தமது மதிப்பீட்டு அறிக்கைகளை விரைவுபடுத்தி சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இதன்போது தெரிவித்தனர்.