கன்தளாய் உதவி காணி ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் குடியேற்ற உத்தியோகத்தரொருவரை (ஜனபத இடம் நிலதாரி) இன்று (19) செவ்வாய்கிழமை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அக்போபுர 87ம் கட்டை பகுதியிலுள்ள காணியொன்றுக்கு காணி உரிமம் பெற்று தருவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த குடியேற்ற உத்தியோகத்தர் மெதிரிகிரிய பகுதியைச்சேர்ந்த ஆர்.எம்.காமினி ரத்னாயக்க (ஜம்பத்தேழு வயது) எனவும் தெரியவருகின்றது.
வயோதிபரிடம் காணி உரிமம் வழங்குவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டிருந்த நிலையில் அவரது உறவினரொருவரினால் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டையடுத்து அவர்கள் இவரை இன்றைய தினம் கைது செய்ததாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டார்.