ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை வீதி, பழைய தபாலக வீதி, வொலிவோரியன் வீதி ஆகியவற்றிலுள்ள பாலங்கள் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளதோடு வி.சி வீதி, கானடி வீதி, தோம்போறு வீதி ஆகியவற்றுக்கு புதிய பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.
அதற்கமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆர். சத்தியநாதன் இன்று (19) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகைதந்து மேற்குறித்த புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பாலங்களின் அமைவிடங்களையும் புனரமைக்கப்படவுள்ள பாலங்களையும் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டார்.
இதன்போது அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா பிரசன்னமாகியிருந்தார்.
சாய்ந்தமருது தோணாவினை ஊடறுத்துச் செல்லும் வைத்தியசாலை வீதி, பழைய தபாலக வீதி ஆகியவற்றின் பாலங்கள் ஒடுக்கமானதாக காணப்படுவதனால் அப்பாலங்களின் ஊடாக ஒரே நேரத்தில் இரண்டு புறங்களிலுமிருந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் இப்பிரதேச மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டே குறித்த பாலங்களை இருவழிப் பாதையாக பயன்படுத்தும் வகையில் புனரமைப்பதற்கான வேண்டுகோளை பிரதி அமைச்சர் ஹரீஸ் விடுத்திருந்தார்.
மேலும் சாய்நதமருது பிரதேசத்தில் வி.சி வீதி, கானடி வீதி, தோம்போறு வீதி ஆகியவற்றில் பாலங்கள் இன்மையினால் அவ்வழியாக செல்பவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். அதனை நிவர்த்திக்கும் வகையிலே பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக அவ்வீதிகளில் புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.