இது விடயத்தை இஸ்லாம் மற்றும் நடை முறை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான சட்டம் என்பவற்றை வைத்தே நாம் முடிவு செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் பணக்கார்களாக வாழ்ந்தவர்கள்தான். மறுக்க முடியாது. அதனால் அவர்கள் முகத்தை காட்டுவது நல்லதல்ல என்பது சிலரது அபிப்பிராயம்.
ஆனால் கண்டியில் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் தமது சொத்துக்களை இழந்தமை அவர்கள் செய்த தவறு காரணமாக அல்ல. முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக ஐ தே க அரசின் அனுசரணை மூலம் பாதிக்கப்பட்டனர் என்பதால் இது கேவலமானதல்ல. நாளை நாமும் அடிபடலாம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்காமல் ஐ நா வரை நமது முகத்தை காட்டும் தைரியம் நமக்கு வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறு பணக்காரர்களாக இருந்து காபிர்களால் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின் விரட்டப்பட்டவர்களின் பெயர்களை இன்று வரை நாம் ஏட்டில் காண்கிறோம். அதே போல் யார் யார் அவர்களுக்கு என்ன உதவிகளை செய்தனர் என்பதையும் காண்கிறோம்.
ஆகவே ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்வதை பகிரங்கமாக செய்ய நினைத்தால் அவரைத்தடுக்க முடியாது. அதே போல் அவர் இரகசியமாகவும் செய்யலாம். ஆனால் இவையெல்லாம் தனி நபர் தானாக உதவி செய்யும் போதாகும்.
ஆனால் ஒரு நலன்புரி இயக்கம், அல்லது பள்ளிவாசலில் வசூல் செய்யப்பட்ட பணம் போன்றவற்றை வழங்கும் போது கட்டாயம் அவை பதிவு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. யாருக்கு எவ்வளவு என்ற விபரங்கள் அவசியமாகும். இதன் மூலம் வசூலித்தவர்கள் சரியாக செய்தார்களா அல்லது சுருட்டினார்களா என்பதும் பாதிக்கப்பட்ட ஒரே ஆள் மோசடியாக பலரிடம் பெற்றாரா என்பவற்றை அறிய உதவியாக இருக்கும்.
ஏனென்றால் சுனாமி அடித்த போது பாதிக்கப்படாமலேயே பாதிக்கப்பட்டதாக சுருட்டியோரும் நம்மிடையே உண்டு. சுனாமி உதவிகளை கொடுக்காமல் சுருட்டியோரும் உண்டு.
ஆகவே கண்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் போது அவர்கள் பற்றிய விபரம் போட்டோ என்பவற்றை ஆவணப்படுத்துவதில் தவறில்லை.