கிண்ணியா பாலத்தில் மின் விளக்குகளை ஒளிரச்செய்ய முடியாதவர்களே மீண்டும் அதிகாரத்தை கேட்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியா பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சுமார் இருபது வருடங்களின் பின்னரே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இதனால் இப்பொழுதுதான் மெதுவாக நாட்டை அபிவிருத்தி பாதையின்பால் இட்டுச்செல்கிறோம். இது இவாறிருக்க மத்திய அரசில் அரசின் பங்காளி கட்சிகளாக உள்ள சிறுபான்மை கட்சியினர் ஐக்கிய தேசிய கட்சி என்ன அபிவிருத்தி செய்துள்ளது என மேடைகளில் கேள்வி எழுப்புவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
கடந்த முறை உள்ளூராட்சி சபைகள் அவர்களிடமே இருந்தது. அதுமட்டுமலாமல் மாகணசபை அதிகாரங்கள் பாராளுமன்றத்தில் பல அமைச்சுக்கள் அவர்களிடமே காணப்பட்டது. இருந்தபோதும் அவர்களால் கிண்ணியா பாலத்தில் உள்ள மின்விளக்குகளை கூட ஒளிரச்செய்யமுடியவில்லை. அத்தனை அதிகாரம் இருந்தும் மின்விளக்குகளை கூட ஒளிரச்செய்ய முடியாதவர்களே மீண்டும் உங்கள் முன்வந்து அதிகாரத்தை கேட்கிறார்கள்.
திருகோணமலையை பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதுத்துவபடுத்தும் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக நான் மட்டுமே உள்ளேன். எமக்கான மாகணசபை உறுப்பினரோ உள்ளூராட்சி மன்ற உறுப்பினரோ இல்லை. ஆகவே இன்று ஆளும் கட்சியாக உள்ள ஐக்கியதேசிய கட்சியிடம் இந்த அதிகாரங்களை தாருங்கள் அபிவிருத்தி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் காட்டிகொடுக்கிறோம்.
இன்று எமது அரசை விமர்சிக்கும் சிறுபான்மை அமைச்சர்கள் கடந்த மஹிந்த அரசின் அமைச்சர்களாகவும் இருந்தனர். இருந்தும் ஏன் அவர்களால் இன்று அவர்கள் செய்ததாக கூறும் அபிவிருத்திகளை செய்யமுடியவில்லை. ஏன் என்றால் அவர்களால் அவர்களின் அமைச்சு வேலைகளை ஒழுங்காக செய்யவும் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே தேவைப்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஊடகப்பிரிவு