ஹம்ஸா கலீல்-
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இந்த வருடம் ஐம்பது வீடுகள் வீதம் அந்த அந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவினுடைய தலைவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
இதில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட பிரதேசத்திற்கென ஐம்பது வீடுகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் வழங்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரான கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய பணிப்புரையின் பேரில், முதற் 16 வீடுகளை முதியோர் இல்ல வீதியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு கீழாக இருக்கின்ற சொந்தமான காணியில் சம்மேளனத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 16 பயனாளிகளுக்குரிய வீடுகளை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிதியினை வழங்குவது என்றும் மேலதிகமாக இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியினை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் கட்டி ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் இதனுடைய நியதியாகும்.
இதன் அடிப்படையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், பிரதேச செயலகம் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடனான கலந்துரையாடலின் போது மிகுதி இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக தெரிவித்தார்.
இதற்கமைய முதற்கட்டமாக 16 பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 16 இலட்சம் ரூபாய்க்கான காசோலை இராஜாங்க அமைச்சர் அவர்களால் நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்த பணத்தை வைத்து பயனாளிகள் முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பது எனவும் அது தொடர்சியாக இடம்பெறும் பட்சத்தில் இறுதியாக உள்ள ஒன்றறை இலட்சம் ரூபாய் பணம் 16 பேருக்கும் வழங்குவது எனவும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதனை தொடர்ந்து 50 வீடுகளில் 16 வீடுகள் தவிர மிகுதியாக உள்ள வீடுகள் கிலஸ்டர் முறையில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட காத்தான்குடி சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்படுகின்ற வீடுகள் அற்ற பயனாளிகளுக்கு அமைத்துக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. எனவே 16 வீடுகளைக் கொண்ட இந்த வீட்டுத்தொகுதியில் காத்தான்குடி சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பயனாளிகளுக்கு மேற்படி வீடுகள் வழங்கப்படுவதில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மேற்பார்வையினை கொண்டு குறிப்பிட்ட அந்த பயனாளிகளுக்கே வீடுகள் கிடைக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்கள்.