எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்வியமைச்சினால் நாடு பூராகவும் பாடசாலைகள், அரச நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தின் தொடரில் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்திலும் கடந்த 28.07.2017ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் என்.எம். ஹஸ்ஸாலி அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, டெங்கு நோய்த்தாக்கத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நல்லெண்ணம் கொண்ட பெற்றோர்களும் இந்தப்பணியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிரமதானப்பணிகளில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நௌசாத் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற டெங்கொழிப்பு நிகழ்வில் போது, பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் டெங்கு தாக்கத்தின் விபரீதங்கள் மற்றும் அதனைக்கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பில் பூரண விளக்கங்களையும் வழங்கினார். இச்சிரமதானப் பணியில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.