எஸ்.ஹமீத்-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த தடையினால், அமெரிக்காவில் சத்திர சிகிச்சை பெறுவதற்காகக் காத்திருந்த ஈரானியக் குழந்தை பாத்திமா ரெஷாத்தின் நிலை கவலைக்கிடமாகியிருந்தது. என்ற போதிலும், குடிவரவு சட்ட அதிகாரிகளினதும் மாநில மத்திய அதிகாரிகளினதும் பூரண ஒத்துழைப்பினாலும் முயற்சியினாலும் குழந்தை பாத்திமாவுக்கு அமெரிக்க ஒரேகன் சுகாதார மற்றும் விஞ்ஞான சிறுவர் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது.
குழந்தை பாத்திமாவின் சிகிச்சைக்கென அமெரிக்காவில் பல்வேறு மட்டங்களிலிருந்தும் குரல்கள் எழுந்திருந்தன. அத்தோடு ஆங்காங்கே நிதியும் திரட்டப்பட்டது. அது மட்டுமன்றித் தற்போது மருத்துவ மனை நிர்வாகமும் சிகிச்சைக்கான கட்டணத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுத்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.
'இத்தனை தடைகளையும் தாண்டி பாத்திமாவுக்கு சிகிச்சை நடந்து முடிந்தமை ஓர் அதிசயம்.' என்று, பாத்திமாவின் நெருங்கிய உறவினரான சமத் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
மேலும், பாத்திமாவின் சத்திர சிகிச்சை விடயத்தில் அமெரிக்காவின் நியூயோர்க் கவர்னர் அன்ட்ரூ குவோமா பெரிதும் அக்கறை கொண்டிருந்தார் என்று நாம் முன்னர் செய்தி வெளியிட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
