மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியத்தின் (ஜெயம்) வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில், அங்கு உருவான அமைதியற்ற சூழல் காரணமாக குறித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாழைச்சேனையில் இருந்து வாகரை பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சென்ற வேனும், நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஏறாவூரைச் சேர்ந்த 48 வயதான நபரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
