27.02.2017 அன்று காலை 9 மணிக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் முதலமைச்சர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்காதிருக்க மாகாண முதலமைச்சர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்ரியவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முதலமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதுடன் இந்தக் கூட்டம் மூன்று மணித்தியாலங்கள் நீடித்தமை சுட்டிக்காட்டத்தக்கது,
இந்தக் கூட்டத்தை முதலமைச்சர்கள் புறக்கணித்தமைக்கான காரணம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிட்டம் வினவிய போது;
தமது அமைச்சினூடாக மாகாண சபைகளுக்கான நிதியதிகாரங்களை கட்டுப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அமைச்சின் ஒரு திணைக்களமாக மாகாண சபைகளை மாற்றுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த காலங்களில் பிரயத்தனங்களை முன்னெடுத்திருந்தன் காரணமாக எந்த நம்பிக்கையில் அவரது தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்பதென்ற கேள்வி முதலமைச்சர் மத்தியில் இருந்ததாக கிழக்கு முதலமைச்சர் கூறினார்.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவை சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலை உருவாக வேண்டுமென்ற கோரிக்கையை முதலமைச்சர்கள் முன்வைத்து வரும் நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் அதிகாரப் பகிர்வு குறித்து சாதகமான கருத்துக்களை வௌியிட்டு வரும் நிலையில் இவ்வாறான கூட்டங்களின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை முடக்குவதற்கு மத்திய அரசின் அமைச்சர்கள் முயற்சிப்பதாகவே இதனை முதலமைச்சர்கள் கருதுவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,
அது மாத்திரமன்றி நிதி ஆணைக்குழு மற்றும் தேசிய சம்பள மற்றும் ஆளணி ஆணைக்குழுவுடன் மாதம் இரு முறை கலந்துரையாடுவதற்கு இதில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன் பல முறை இந்த ஆணைக்குழுக்களுடன் கலந்துரையாடியும் தீர்வேதும் கிடைக்காததால் வெறும் காலத்தைக் கடத்தும் செயற்பாடாகாவே இவற்றைக் கருத வேண்டியுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கடந்த வருடத்திற்குரிய 35 வீதமான நிதியே இதுவரை மத்தியரசினால் வழங்கப்பட்டுள்ளதுடன் பல அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்த நிலையில் மீதிநிதியைப் பெறுவதற்கு பற்றுச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்துக்கு 51 வீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருடம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்து மூன்றாம் மாதம் ஆரம்பிக்கும் தருவாயிலும் இதுவரை ஒரு சதம் நிதி கூட கிடைக்காத நிலையில் பல வேலைத்திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிதி ஆணைக்குழு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நிதியைத் தராமல் இழுத்தடித்துக் கொண்டு கலந்துரையாடல்களுக்கு அழைப்பது காலத்தை வீணடிக்கும் செயற்பாடேயன்றி வேறென்னவென்று கருத முடியும் சம்பள மற்றும் ஆளணிகள் தொடர்பான தேசிய ஆணைக்குழு உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இன்று கிழக்கில் பட்டதாரிகள் வெயிலிலும் மழையிலும் பாதைகளில் நின்று போராட வேண்டிய தேவையேற்பட்டிருக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,
அது மாத்திரமன்றி சம்பள மற்றும் ஆளணிகள் தொடர்பான தேசிய ஆணைக்குழு உரிய வகையில் செயற்பட்டிருந்தால் கிழக்கில் 5021 வெற்றிடங்கள் இருந்தும் பட்டதாரிகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
இதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மாகணங்களுக்கு உரிய அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க முற்படும் வேளையில் இவ்வாறான கூட்டங்களின் மூலம் மாகாண அரசாங்கங்களின் மேலும் அதிகாரங்களை நயவஞ்சகமான முறையில் பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சி நடக்கின்றதா என்ற சந்தேகமும் முதலமைச்சர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
எமக்கு 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு எம்மை செயற்பட விடாமல் கைகளை கட்டிவிட்டு எம்மை வௌ்ளையானைகள் என குறைகூறுவதை மாத்திரம் இன்று சில அரசியல்வாதிகள் செய்துவருகின்றனர்.
எமக்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியினையும் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் வழங்கினால் யார் வௌ்ளை யானைகள் என மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே அமைச்சர்களுக்கோ அமைச்சுக்களுக்கோ மாகாண சபைகள் பொறுப்புக் கூற கடமைப்பட்டன அல்லவெனவும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே மாகாண சபைகள் பொறுப்புக் கூற கடமைப்பட்டன என்பதை அனைத்து முதலமைச்சர்களும் தீர்மானித்துள்ளதாகவும் இதனடிப்படையில் விரைவில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கு முதலமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்
