ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் மாணவர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்தி அவர்களை ஊக்குவிப்புச் செய்யும் வகையில் நாடாளவிய ரீதியில் கடந்த 2015இல் க.பொ.த.சாதாரண தரத்தில் ஒன்பது ஏ (9யு) சித்தி பெற்ற மாணவர்கள் சுமார் 198 பேர் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்ககத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
அமைப்பின் தலைவர் அஹமட் எம். முனவ்வர் தலைமையில் கொழும்பு-07இல் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ஏ.எம். இஷாக்கும் கௌரவப் பேச்சாளர்களாக மலேசியாவின் அஷ்-ஷெய்க் மௌலானா முஹமட் அப்துல் காதர், பேருவளை ஜாமிய்யா நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல், மற்றும் நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் ஆகியோரும் விஷேட அதிதிகளாக ஏ.சி.மசூர் மௌலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அதிதிகளால் மாணவர் ஒருவருக்கு ஒன்பதாயிரம் ரூபா பணப்பரிசில்கள், சான்றிதழ்கள். நினைவுச் சின்னங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றம் பெறுமதியான பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. வரவேற்புரையை அமைப்பின் செயலாளர் ஹிஸாமும், நன்றியுரையை அமைப்பின் போசகர் அப்துல் லத்தீபும் வழங்கினர்.