தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கு பொலிஸாரும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கட்டிட நிர்மாணப் பொருட்களை அவ்விடத்திலிருந்து அகற்றிக்கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு நேற்று -25- உத்தரவிட்டனர்.
தெஹிவளை பாத்யா மாவத்தையிலுள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெளத்த தேரர்கள் கடந்த திங்கள் இரவு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் பள்ளிவாசல் நிர்வாகிகளை தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணையொன்றினை நடாத்தினார்.
ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்டத்தரணிகளும் விசாரணையில் கலந்து கொண்டனர். விசாரணையில் பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்ட தேரர்களும் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள் உரிய சட்டரீதியான அனுமதி பெறப்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.
ஆனந்த சாகர தேரர் தலைமையிலான பெளத்த தேரர்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் முறையிட்டனர்.
இந்நிலையிலே பள்ளிவாசல் நிர்வாகம் கட்டிட நிர்மாணப் பொருட்களை நேற்று கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருக்கையில் பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து கட்டிட நிர்மாணப் பொருட்களை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அவ்வாறு அகற்றிக்கொள்ளாவிட்டால் கட்டிட நிர்மாணப்பணிகளை முழுமையாக நிறுத்திவிடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
விடிவெள்ளி ARA.Fareel- jm