எப்.முபாரக்-
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கிழக்கில் உள்ள பட்டதாரிகளையும் இணைத்துக் கொண்டு அகிம்சைப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை(12) பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி கொழும்பு அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்ட நியமனமானது கொழும்பை மையப்படுத்தியே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் ஒருவர்கூட கிழக்கில் நியமனம் செய்யப்படவில்லை இதனை ஆட்சோபித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கிழக்கு மாகாண பட்டதாரிகளை அம்மாகாணத்தில் மீள்நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அனைத்து பட்டதாரிகளையும் இணைத்து அகிம்சை வழியில் தான் முழுமையாக போராட்டங்களை மேற்கொள்வதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் கூடிய விரைவில் ஜனாதிபதியைச் சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரிடம் வாக்குரிதியளித்ததாகவும் தெரிவித்தார்.
