கல்வி, தொழில், கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் பல்துறை ஆளுமையாகத் திகழும் இவர், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்புப் பட்டப்படிப்பையும், உளவியல் சான்றிதழ் கற்கையையும் நிறைவு செய்துள்ளார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கையையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார்.
தொழில்துறையில் 2008ஆம் ஆண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளராக தனது அரசுப் பணியை ஆரம்பித்த இவர், தற்போது வவுனியா மாவட்டப் பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தமிழ்–ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும், நீதியமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளராகவும் பொறுப்புடன் சேவையாற்றி வருகிறார்.
கலை மற்றும் இலக்கியத் துறைகளிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள சிவகௌரி (சுடரி), பல்வேறு சஞ்சிகைகள், ஆண்டு மலர்கள் மற்றும் இலக்கிய வெளியீடுகளில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட பல படைப்புகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.
2025ஆம் ஆண்டு முதல் நூல் வெளியீட்டிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், "பிரபஞ்ச பேரொளியே…" என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து "அவளுக்கென்று ஓர் உலகம்" என்ற சிறுகதைத் தொகுப்பு, "காதலாகி…" என்ற கவிதைத் தொகுப்பு, "உனக்குள் உன்னைத்தேடு" என்ற கட்டுரைத் தொகுப்பு மற்றும் "முத்துப்பரல்கள்" என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், பல புதிய படைப்புகள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமூக நலன், பெண்கள் முன்னேற்றம், இலக்கிய வளர்ச்சி மற்றும் பொதுப் பணிகளில் தொடர்ந்து பங்களித்து வரும் சிவகௌரி (சுடரி), புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் தலைவியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்பிற்கும் மகளிர் அணிக்கும் மேலும் வலுசேர்க்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இவரது புதிய பொறுப்பிற்காக கலை, இலக்கிய மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment