இவ்வாண்டு ஜனவரி 2ஆம் திகதி, சவூதியில் வைத்து 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையைத் தொடர்ந்து, அந்நாடு மீது தாக்குதல் மேற்கொள்ளுமாறு, அல் கொய்தா குழு கோரியுள்ளது.
அல் கொய்தா குழுவின் தலைவர் அய்மான் அல்-ஸவஹ்ரியால் வெளியிடப்பட்டுள்ள ஒலிப்பதிவிலேயே, இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில், பிரபல ஷியா தலைவரான நிம்மர் அல்-நிம்மர் உட்பட நான்கு பேர் ஷியா முஸ்லிம்களாக அமைய, ஏனைய 43 பேரும், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்களென அறிவிக்கப்படுகிறது.
இந்த 43 பேருக்கான மரண தண்டனையே, அல் கொய்தாவை ஆத்திரப்படுத்தியுள்ளது. இந்தக் கொலைகளுக்கான பலனை, சவூதி அரேபியா அனுபவிக்க நேருமென அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு, சவூதி மன்னரைப் பதவியிலிருந்து அகற்றுமாறு, சவூதி மக்களைக் கோரியுள்ளார். ‘உங்களுடைய மதத்தையும் உங்கள் வாழ்க்கையும் நாசமாக்கியுள்ள அழுகிப்போயுள்ள இந்த அரசங்கத்தை அகற்றுவவதற்கான நேரம் இது இல்லையா?” என, அவர் கேள்வியெழுப்பினார்.
அத்தோடு, ஷியா குழுத் தலைவராக அல்-நிம்மரைக் கொன்றமை, மத்திய கிழக்கில் தனது ஆதரவை அதிகரிப்பதற்காக சவூதி மேற்கொண்ட முயற்சி என அவர் குற்றஞ்சாட்டினார். அவரைக் கொல்வதன் மூலம், ஈரானுக்கெதிரான நாடுகள், சவூதி அரேபியாவோடு இணைந்து கொள்ளுமென்பதே, சவூதியின் திட்டம் என அவர் குற்றஞ்சாட்டினார்.
