வில்பத்து விற்கப்படுகிறதா..?

சுலைமான் றாபி-
டமாகாணத்தில் இருந்து கடந்த 1990ம் ஆண்டு விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற வழிசமைத்துக் கொடுப்பதற்காக வேண்டியும், அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டிய தேவையும் இன்று உருவாகியிருக்கின்ற வேளையில், இந்த விடயங்களானது இனவாதிகளின் கண்களுக்கு மிகவும் வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாகவும், இதனை சாதகமாக வைத்து இனவாதத்தினை இலேசாக பரப்பி விடுவதற்கான உந்து சக்திகளும் திரைமறைவில் நகர்த்தப்படுகின்ற போது இவைகளுக்கு மறைமுகமாக தீனி போட்டு இன்னும் ஊதிப் பெருப்பிக்கும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் செயற்படுவது ஒரு பக்கம் கவலையாக உள்ளது. 

பாவம் வில்பத்து முஸ்லீம்கள்..!

உண்மையில் வில்பத்து விவகாரத்தில் தான் மட்டும் நின்று கொண்டு அனைத்து சவால்களையும் முகம் கொள்ளும் தைரியம் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் தைரியத்தினை பாராட்டினாலும், தொடர்ச்சியாக வில்பத்து விவகாரம் ஊடகங்கள் வாயிலாக விற்கப்படுவது வடமாகாண முஸ்லிம் சமூகதிற்கு எதிர்காலங்களில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கப்போகிறது. 

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் வில்பத்து விவகாரம் சம்பந்தமாக தொலைக்காட்சிகளில் இனவாதிகளுடன் விவாதிக்கப்போகிறார், விவாதம் வெற்றி பெற துஆ செய்யுங்கள், அவர் வெற்றிபெற துஆ செய்யுங்கள், மறைந்த தலைவரிற்குப் பிறகு தைரியமாக தொலைக்கட்சியில் விவாதிக்கும் சிங்கம் என்றெல்லாம் விளம்பரங்கள் ஊடகங்கள் வாயிலாக பரப்பி விட்டு, ஏதோ தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப்பின் அமைச்சர் ரிஷாட் தான் இலங்கை முஸ்லிம்களை காக்க வந்தவர் என்கின்ற ஒரு வகையான மாயைகள் தோற்றுவிக்கப் படுகின்றது. இது உண்மையில் ஒரு முட்டாள் தனமான ஐதீகமாகக் காணப்படுகின்றது. 

உண்மையில் அமைச்சர் ரிஷாட் பக்கம் இந்த வில்பத்து விடயம் சம்பந்தமான நியாயமான காரணங்கள் இருந்தாலும் வாறவன், போறவனிடமெல்லாம் வில்பத்து பற்றி விவாதிக்க கூப்பிடுவது அல்லது அந்த விவாதங்களில் கலந்து கொள்வது அவரின் அரசியல் அறியாமையாக சமூக ஆர்வலர்களால் உற்று நோக்கப்படுகின்றது. 

மேலும் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் வில்பத்து விவகாரத்தினை வைத்து இனவாதிகள் விசமப்பிரச்சாரம் செய்தாலும், வன்னியில் உள்ள அமைச்சர் ரிஷாட்டின் ஆதரவாளர்களும் வில்பத்துவை வைத்தே அரசியல் பிரச்சாரங்களினை முன்னெடுத்தார்கள். 

இது இவ்வாறு இருக்க இதே வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக கடந்த 21.05.2015ம் திகதி ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் ரிஷாட் அவர்கள் கலந்து கொண்டு தெளிவான மற்றும் ஆதார பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தும் கூட, முகவரி இல்லாமல் எங்கோ இருந்து வந்த ஆனந்த சாகர தேரருடன் இன்று விவாதிக்கப் புறப்பட்டிருப்பது வில்பத்துவை விற்றுப் பிழைக்கின்றாரா என எண்ணத் தோனுகிறது. ஏன் அமைச்சர் ரிஷாட் அவர்கள் சின்னப் பிள்ளைகளுடன் மோதுகிறார்? அதே போன்று ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு தைரியமாக இனவாதம் பேசும் பிக்குகளுடன் இவர் அடிக்கடி மோதிக் கொள்வது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பில் கேள்விக் குறிகளை தோற்றுவிக்குமா? என்கின்ற அடிப்படைவாத கேள்விகள் ஒவ்வொருத்தரிடத்திலும் உருவாகத்தான் செய்கிறது.

அதேபோன்று இன்று 28.12.2015ம் திகதி ஹிரு தொலைக்காட்சியில் இரவு 10.00 மணிக்கு அமைச்சர் ரிஷாட், ஆனந்த சாகர தேரர் ஆகியோருடனான விவாதம் வீண் வம்புகளை தோற்றுவிக்கப் போகிறதா? அல்லது இத்துடன் இந்த வில்பத்து விவகாகரம் முடிவுக்கு வரப்போகிறதா அல்லது இதில் இருந்துதான் இன்னும் விசாலமடயப்போகிறதா என்கின்ற கேள்விகளும் எழத்துவங்கியுள்ளது 

இதற்கிடையில் வில்பத்து தேசிய வனத்தினை அமைச்சர் ரிஷாட் உள்ளிட்டோர்கள் அழித்து அவைகளை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதற்கு அமைச்சரே முழுக்காரணம் எனவும் இனவாதிகளால் கருத்துக்கள் பரப்பப்பட்டு அந்த கருத்துக்களுக்கு ஒத்துப்போகும் அறிக்கைகளையும் தயாரித்து அவைகளை ஜனாதிபதி முன்னிலையிலும் கொண்டு போய் சேர்த்துள்ளனர். இவையெல்லாம் என்றோ ஒரு நாள் பூதாகரமா வெடிக்கத்தான் போகிறது. (அப்படி ஒன்றும் நடக்க கூடாது என இந்த இடத்தில் நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்)

இது இவ்வாறு இருக்க பல ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவையின் பிரதம பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன அவர்கள் பலதடவை வில்பத்து சம்பந்தமாக பல கருத்துக்களும், தெளிவுகளும் வழங்கியதோடு, அங்கு காடுகள் அழிக்கப்படவில்லை எனவும், முஸ்லிம்கள் திட்டமிட்டு குடியேற்றப்படவில்லை எனவும் தெரிவித்த போதும், ஒரு அமைச்சரவின் பேச்சாளரின் பேச்சுக்களையே பொருட்படுத்தாமல் வீண் விதண்டாவாதத்தின் மூலம் இந்த வில்பத்துவை இன்னும் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் மர்மம்தான் என்ன? இந்த மர்மம் எப்போது துலங்கப்போகிறது? ஆடுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. பாவம் அந்த வில்பத்து முஸ்லீம்கள்..!

சரி இந்த வில்பத்து விவகாரம் சம்பந்தமாக ஒரு நிலையான தீர்மானம் எடுக்க முடியாத நிலைமையில் தானா அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சராக அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் உள்ளார்? அப்படிஎன்றால் அமைச்சரவை மூலமாவது இந்த வில்பத்து விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவரலாமே. இதுதவிர தொலைக்கட்சிகளில் தொண்டை கிழிய கத்துவதில் எவ்வித பயனும் இல்லை. 

அதேபோன்று அமைச்சர் ரிசாட் பதியுத்தீனிடம் இருக்கும் ஒரு விடயம்தான் எதற்கெடுத்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்.! அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிவேன்.! என்கின்ற வீர வசனங்களாகும். இந்த வீர வசனங்கள் எல்லாம் ஒரு நாள் பலித்தால் வில்பத்து விடயத்தில் அமைச்சரை நம்பியுள்ள அந்த மக்களின் நிலை என்னவாகும்??? 

எனவே வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் முறையான ஒரு திட்டத்தினை வகுத்து, போர் முடிந்ததன் பிற்பாடு அங்குள்ள முஸ்லீம்களின் பூர்வீகப் பிரதேசங்களான மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, சிலாபத்துறை, பாலைக்குழி உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துக் கொள்வது அமைச்சரினதும், வில்பத்து விடயத்தின் அவரின் பின்னால் இருந்து செயற்படும் ஊது குழல்களினதும் தலையாய கடமையாகும். 

எனவே இந்த வில்பத்து விடயத்தில் அமைச்சரும், அவரின் குழுக்களும் இனியாவது தூரநோக்கு சிந்தனையோடு செயற்படுவதோடு, வீணான விவாதங்களிலும், வெற்றுப்பேச்சுக்களிலும், வெறும் அறிக்கைகளிலும் காலம் கடத்தாமல் அந்த மக்களை காப்பாற்றுவதற்காக வழிகளை அமைத்துக் கொடுப்பது அமைச்சரின் கடமையாகும். அதற்காக வேண்டி வீதியால் வருகின்றவர்களிடமும், போகின்றவர்களிடமும் விவாதிக்க வேண்டிய வசியம் இல்லை. 

அமைச்சர் ரிசாட் பதியுத்தீனின் தைரியம் பாராட்டப்படவேண்டியதுதான்..! அதற்காக வில்பத்தை விற்காமல் வேகமாகவே முன்னேறுங்கள் ! உண்மை ஒரு நாழும் அழியாது.!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -