ஏ.எல்.றமீஸ்-
வீடமைப்பு சமூர்த்தி அமைச்சினால் அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 1900 குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவி வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தலைமையில் அம்பாரையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வீடமைப்பு, சமூர்த்தி அமைச்சர் சஜீத் பிரமதாஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடமைப்புக்கான உதவிகளை பயனாளிகளிடம் கையளித்தார்.
இவ் வீடமைப்பு திட்டத்தில் பொத்துவில் பிரதேசத்துக்கு 65 வீடுகள் வழங்கப்பட்டிருந்தது. இவ் வீடுகள் வழங்கப்பட்டமைக்கு பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸாரத் அவர்களினால் நன்றி தெரிவித்த கடிதத்தை சிரேஷ்ட கிராம நிலதாரி எம்.எல்.அபுல் ஹஸனினால் அமைச்சரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன். மேலும் மிகவும் பின்தங்கிய பழமை வாய்ந்த பிரதேசமான பொத்துவில் பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால் இப் பிரதேசத்துக்கு இன்னும் நூறு வீடுகள் வழங்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டிய கிராம சேவை உத்தியோகத்தர் அதற்கான ஆவணத்தையும் அமைச்சரிடம் கையளித்தார்.
ஆவணத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சஜீத் பிரமதாஸ இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுடன் இதற்கான நடவடிக்கையை துரிதகதியில் மேற் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

