எம்.எம்.ஏ.ஸமட்-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆரம்பப் கல்விப் பாடவிடயங்களுக்கான டிப்ளோமாதாரிகளின் கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளிலிருந்து டிப்ளோமாகக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ள டிப்ளோமாதாரிகள் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தின்போது தங்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயத்தினை குறித்த டிப்ளோமாதாரிகளின் பெற்றோரும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதன் நிமித்தம், இக்கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த டிப்ளோமாதாரிகளை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் அஹமட் நசீரை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட டிப்ளோமாதாரிகள் கடந்த வருடம் ஊவா, மத்தி மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகவும். இதனால் ஒரு சில டிப்ளோமாதாரிகள் கடந்த வருடம் தொழில்வாய்ப்பை இழந்ததாகவும் அறிய முடிகிறது.
இவை குறித்து ஆராய்ந்தபோது கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுக்கான வெற்றிடங்கள் காணப்படாத காரணத்தினால் இவர்கள் வெளி மாவட்டங்களில் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும,; கல்வி அமைச்சின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் கிழக்கு மாகாணப் பாடசலைகளில் ஆரம்பப் பிரிவுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பத்திரிகைச் செய்தியொன்றில் காணக்கிடைத்தது.
இந்நிலையில், கல்வி அமைச்சினால் எதிர்வரும் மே மாதம் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்நியமனங்களின்போது கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்;ட டிப்ளோமாதாரிகளை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட வேண்டும்.
அதற்கான உரிய நடவடிக்கைகள் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கருதியே இவ்விடயத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கிழக்கு மாகாண உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மேலும் தெரிவித்தார்.
.jpg)