தேசிய மட்டத்திலான அரச உயர் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சையில் மாணவர்கள் தோன்றுவதற்கு தயார் படுத்துகின்ற வலுவூட்ல் நிகழ்வின் அறிமுக நிகழ்வு



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம் (FIA), பல்கலைக்கழகத்தின் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தேசிய மட்டத்திலான அரச உயர் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் மாணவர்களைத் தயார்படுத்தும் விசேட வலுவூட்டப் பயிற்சி நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு 2026.01.09 ஆம் திகதி இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.. நிகழ்வில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் ஆர். ஹனாஸ் அஹமத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பீடாதிபதி அஷ்-ஷெய்க் எம். எச். ஏ. முனாஸ் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய பீடாதிபதி அஷ்-ஷெய்க் எம். எச். ஏ. முனாஸ், பல்கலைக்கழக மாணவர்களை வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் வெளியேற்றுவது போதுமானதல்ல என்றும், அரச உயர் சேவைகளில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய ஆளுமை மிக்க தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் வலியுறுத்தினார்.

கலை மற்றும் கலாசார பட்டதாரிகள் வேலைவாய்ப்புச் சந்தையில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற பொதுவான கருத்து நீண்ட காலமாக நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்காகவே இந்தப் பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாணவர்களின் Soft Skills மற்றும் நிர்வாகத் திறன்களை வளர்க்கும் வகையில், Management Competencies, Basic Mathematics, Sri Lanka Law, Administrative Law, Human Rights மற்றும் Critical Thinking போன்ற பாடப்பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

அண்மைக்கால அரச போட்டிப் பரீட்சைகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து வருவது குறித்து கருத்துத் தெரிவித்த பீடாதிபதி, இது பாகுபாட்டின் விளைவாக மட்டுமல்லாது, சமூகமாக நாம் உரிய முறையில் போட்டிப் பரீட்சைகளுக்கு தயார்படுத்தப்படாததன் விளைவாகவும் இருக்கலாம் என சுயவிமர்சனத்துடன் தெரிவித்தார்.

உடனடி வருமானத்தை மட்டுமே நோக்கி குறுகிய காலப் பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு, மருத்துவம், பொறியியல் மற்றும் உயர் அரச சேவைகள் போன்ற துறைகளில் இளைஞர்களின் ஈடுபாட்டை குறைத்துள்ளதாகவும், இது சமூகத்திற்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விசேட பயிற்சி நிகழ்ச்சி மொத்தம் 80 மணிநேரங்களைக் கொண்டதாகவும், மாணவர்களின் வசதிக்கேற்ப Online மற்றும் Physical வகுப்புகள் இணைந்த Blended Mode-இல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு மற்றும் Internship மாணவர்களுக்கே இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிக்காக 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமை, மாணவர்களின் ஆர்வத்தையும், இத்திட்டத்தின் அவசியத்தையும் தெளிவுபடுத்துவதாகவும் பீடாதிபதி குறிப்பிட்டார்.

நிகழ்வில் வளவாளர்களாக யூ.எம். அஸ்லம் (SLAS) மற்றும் ஏ. ஜி. பஸ்மில் (SLAS) ஆகியோர் கலந்து கொண்டு, அரச சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான தமது அனுபவங்களையும் வழிகாட்டல்களையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் உள்ளிட்டவர்களுடன் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலைந்து கொண்டிருந்தனர்.

நன்றியுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப். எச். ஏ. ஷிப்லி வழங்கினார். இந்த வலுவூட்டப் பயிற்சி நிகழ்ச்சி, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் கல்விசார் நோக்கங்களில் ஒரு புதிய திசையை உருவாக்கும் முயற்சியாகவும், பல்கலைக்கழக மாணவர்களை நாட்டின் உயர் நிர்வாகத் துறைகளுடன் இணைக்கும் ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கல்வி முயற்சியாகவும் கருதப்படுகிறது.




























 













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :