சாய்ந்தமருது தோணாவை சுத்தப்படுத்தும் பணிக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் மேற்கொண்ட Operation-A (Clean) நடவடிக்கை இந்தப் பிரதேச மக்களிடையே பெரும் பாராட்டையும் நன்றியையும் பெற்றுள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட தோணா நீரோடையை சுத்தப்படுத்துவதற்காக அவர் எடுத்த துணிச்சலான முயற்சி, மக்கள் பிரதிநிதி ஒருவர் எவ்வாறு களத்தில் இறங்கி செயற்பட வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
அரச நிறுவனங்களில் விடுமுறை காலங்களில் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைச் செயல்படுத்தி, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, சில தனவந்தர்களின் உதவியுடன் காலை முதல் மாலை வரை களத்தில் நின்று அவர் நேரடியாக பணிகளை முன்னெடுத்தமை இந்தப் பிரதேச மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.
எனினும், ஆரம்ப கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கையின் பின்னரும், தற்போது தோணாவின் இரண்டு பகுதிகளில் அகற்றப்படாத சல்பீனியா தாவரங்களும் கழிவுகளும் மீண்டும் தேங்கி காணப்படுகின்றன. இவை காலப்போக்கில் மீண்டும் நீரோடையை அடைத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் வெள்ள அபாயங்களை அதிகரிக்கும் நிலை உருவாகும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
கல்வியாளராகவும், சுற்றுச்சூழல் தொடர்பான அறிவும் அனுபவமும் கொண்ட கௌரவ ஆதம்பாவா அவர்கள், சல்பீனியா தாவரங்களின் வேகமான வளர்ச்சியும் அதன் நீண்டகால பாதிப்புகளும் குறித்து நன்கு அறிவார். ஆகையால், முன்பே மேற்கொண்ட பணியை மேலும் மெருகூட்டும் வகையில், “தோணா Operation-C (Clean)” என்ற பெயரில் ஒரு புதிய, விரிவான சுத்தப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பித்து, மீதமுள்ள சல்பீனியா மற்றும் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பிரதேச மக்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தோணா நீரோடையின் பராமரிப்பை தற்காலிக நடவடிக்கையாக அல்லாமல், நிரந்தரத் திட்டமாக வடிவமைத்து, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு முறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு ஒரு நீண்டகால திட்டம் செயல்படுத்தப்பட்டால், குறித்த காலத்திற்கு இந்தப் பிரதேசம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் நிலைத்திருக்க முடியும் என்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
இந்தப் பணிகளை விரைந்து முன்னெடுத்து, சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் முன்வர வேண்டும் என, இந்தப் பிரதேச மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

.jpg)
0 comments :
Post a Comment