பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் முஸ்னத் முபாறக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக, எதற்கெடுத்தாலும் எதிர்த்துக்கொண்டே இருப்பது அரசியல் முதிர்ச்சியல்ல.
இன்றைய அரசியல் சூழலில், சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சி முகாம்கள் அனைத்தும் அரசியல் ரீதியாக ‘சேலைன்’ ஏற்ற வேண்டிய நிலைமையில் உள்ளன. இத்தகைய குழப்பமான அரசியல் முகாம்களை நம்பி, அவர்களுக்குப் பின்னால் சிறுபான்மை கட்சிகள் ‘எடுபட்டுக்கொண்டு’ போவது சமூகத்திற்கு பயன் தரும் அரசியலாக இருக்காது.
2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர். அதன் பலன் என்ன? மக்களுக்கு ஒன்றுமில்லை. அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்தது.
2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு விழுந்தடித்து ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகள், பின்னர் ஒப்பாரி வைத்த நிலைக்குத் தள்ளப்பட்டன. 2019 இல் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குகள் அளிக்கப்பட்டன. அதுவும் முற்றிலும் வீணானது.
2024 இல், 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரவூப் ஹக்கீம், இலகு கணிதம் நடத்தி முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றினார். சமூகமும் அவரை நம்பி ஏமாந்தது.
கடந்த 15 ஆண்டுகளில், உருப்படியாக நாட்டை வழிநடத்த முடியாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கே சிறுபான்மை கட்சிகள் மாறிமாறி ஆதரவளித்தன. அதற்கு வழிகாட்டியதும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள்தான். அத்தனை முயற்சிகளும் வீணாகின.
ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர், குறைந்தபட்சம் பொதுத் தேர்தலில் ஜனாதிபதியின் கட்சிக்கு ஆதரவளித்திருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. அதுவும் இன்னொரு அரசியல் தவறாக முடிந்தது.
எனவே, இனிமேல் அங்கும் இங்கும் தாவும் அரசியலை சிறுபான்மை கட்சிகள் நிறுத்த வேண்டும். ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி, சமூகங்களுக்குரிய உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்ளும் அரசியலே இன்று தேவையானது.
இந்தச் சூழலில், பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதில்லை என தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது.
இதுபோன்ற தெளிவான அரசியல் நிலைப்பாட்டை ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியும், ரிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் முஸ்னத் முபாறக் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment