எம்.சி. சியாத்- கல்முனை-
கல்முனை கரையோரப் பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அதிகமாக பயன்பெற்றுவரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அவசர விபத்து பிரிவுக்காக சகல உபகணரங்களுடன் கூடிய நான்கு மாடி கட்டடம் ஒன்று உலக வங்கி நிதி உதவியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்க வேண்டிய அவசர விபத்து பிரிவை சில தரப்பின் செயற்பாட்டினால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் திரைமறைவில் நடைபெற்று வந்தது.
இந்த விடயத்தை சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.டி.ஹசன் அலியின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். அத்தோடு கடந்த மாதம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஹசன் அலிக்கு பெரு வரவேற்பு வழங்க்கப்பட்டதுடன் குறித்த அவசர விபத்து பிரிவுக்குரிய கட்டிடத்தை தமது வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்க வேண்டிய கட்டிடத்தை மாற்றம் செய்வதற்கு தான் விடமாட்டேன் என்றும் அதைப்பற்றி எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் பகிரங்கமாக அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கூறினார்.
இந்த நிலையில் எதிர்வரும் 16ம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவிற்கான கட்டிடத்துக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடிக்கல் நாட்டவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
சுகாதார அமைச்சராக ஹசன் அலி இருந்து கொண்டு கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது.
இன்று இந்த சம்பவம் கல்முனைப் பிரதேசத்தில் சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹசன் அலிக்கு எதிராக எதிர்ப்புக் கணைகள் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர்.
கல்முனைப் பிரதேச முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு விடயம் கைமாறப்பட்டு அது அவர்களுக்கு இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சுகாதார ராஜாங்க அமைச்சராக இந்தப்பிரதேச மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற கட்சியின் செயலாளர் என்ற மகுடத்தில் இருக்கும் ஹசன் அலி இந்த விடயத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
தமது பிரதிநிதி சுகாதார அமைச்சராக இருக்கின்ற நிலையில் தமது வைத்தியசாலைக்கு வந்த கட்டிடம் வேறு வைத்தியசாலைக்கு கைமாறப்பட்டதை அறிந்து கொண்ட மக்கள் கொதிப்படைந்து ஆவேசமாகக் காணப்படுவதுடன் அமைச்சர் ஹசன் அலிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கல்முனை பிரதேசத்தின் பல பொது அமைப்புக்கள் சுகாதார அமைச்சர் ஹசன் அலிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.
